குற்றம்

”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம்

”பள்ளி மானம் போய்டும்” வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை மிரட்டிய நிர்வாகம்

webteam

உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் இதனை திட்டமிட்டே பள்ளி நிர்வாகம் மறைத்த விஷயம் தற்போது அம்பலமாகியிருக்கிறது. மாணவி தனக்கு நடந்த கொடுமை குறித்து அதிகாரிகளிடம் கூறியிருந்தும், நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்க செய்த முயற்சிகள் காவல்துறை விசாரணையில் வெளி வந்திருக்கிறது. 

வர்ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), டேராடூனில் உள்ள உண்டு உறைவிட பள்ளியில் பயின்று வருகிறார். 3 வாரங்கள் முன்பு வகுப்பு முடிந்தும், சில வேலைகள் காரணமாக வகுப்பிலேயே அமர்ந்து அதனை செய்து கொண்டிருந்தார். அப்போது வகுப்பறைக்கு வந்த அவரது சக மாணவர்கள், கேலி செய்துள்ளனர். தனது வகுப்பு தோழர்கள்தானே என்ற எண்ணத்தில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் கேலி செய்தவர்கள் அவரை தொட்டு பேச முயன்ற போதுதான் வீரியம் புரிந்திருக்கிறது. ஆனால் அவரால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. வகுப்பறையை தாழிட்டு வர்ஷாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

தனது அறைக்கு திரும்பிய வர்ஷா இது குறித்து யாரிடமும் பேசவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல வர்ஷாவுக்கு ஒரு விஷயம் புரிய ஆரம்பித்தது. தனக்கு எப்போதும் ஏற்படும் மாதவிடாய் ஏன் ஏற்படவில்லை, பாலியல் வன்கொடுமையால் தான் கர்ப்பமாகியிருப்பேனா என்ற சந்தேகம் அப்போதுதான் ஏற்பட்டது. உடனே தனது சக மாணவிகள் சிலரிடம் பாலியல் வன்கொடுமை குறித்து கூறாமால், கர்ப்பமாக இருந்தால் மாதவிடாய் வராத என சந்தேகம் கேட்பது போல் கேட்டுள்ளார். அவர்களுக்கு பெரிதாக தெரியவில்லை. பயத்தின் காரணமாக உறைவிட பாதுகாவலரிடம் சென்று நடந்த மொத்த சம்பவத்தையும் கொட்டித்தீர்த்து கண்ணீர் வடித்துள்ளார். 

மாணவியை சமாதானப்படுத்தி, கர்ப்பத்தை கலைக்கும் மருந்தையும் கொடுத்தார் பாதுகாவலர். இது குறித்து பள்ளி முதல்வருக்கு தகவல் கொடுத்தனர். மாணவியை சமாதானப்படுத்தி, மருந்து கொடுத்ததாகவும், தொடர்ந்து சில நாட்கள் அந்த மருந்தை குடித்தால் கர்ப்பம் கலைந்து விடும் என்றும் பாதுகாவலர் முதல்வரிடம் தெரிவித்தார். முதல்வரும் இந்த சம்பவம் வெளியே தெரிந்தால், பள்ளிக்கு அவமானம் என்று சொல்லி, மாணவியை வெளியே சொல்ல வேண்டாம் என மிரட்டியுள்ளார். 

அதே பள்ளியில் படிக்கும் வர்ஷாவின் சகோதரிக்கு இந்த விஷயம் தெரிய வர , தனது தந்தைக்கு போன் செய்து இதனை கூறிவிட்டார். அவர் டேராடூன் புறப்பட்டு வந்தார். இதற்கிடையில் பத்திரிகை நிருபர் ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க, அவர்களும் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் உதவியோடு மாணவியின் வாக்குமூலம் பெறப்பட்டது. 4 மாணவர்கள் மற்றும் 5 பள்ளி அதிகாரிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மாணவிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.