குற்றம்

ஈவ்டீசிங்கால் வேதனைப்பட்டு வாழ்க்கையை முடித்த மாணவி: இருவர் கைது

ஈவ்டீசிங்கால் வேதனைப்பட்டு வாழ்க்கையை முடித்த மாணவி: இருவர் கைது

Rasus

கிருஷ்ணகிரி அருகே ஈவ்டீசிங் காரணமாக பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த தேவீரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் வித்யா. அகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். தற்பொழுது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் மாணவி திடீரென வீட்டில் நேற்று காலை தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே மாணவியின் தற்கொலைக்கு சக மாணவர்கள் இரண்டு பேர்தான் காரணம் என மாணவியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

பொதுத்தேர்வை தான் படித்து வந்த அகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்தான் மாணவி வித்யா எழுதி வந்திருக்கிறார். இதனிடையே மாணவிக்கு நேற்றுமுன்திம் சிறப்பு வகுப்பு நடைபெற்றிருக்கிறது. சிறப்பு வகுப்பு முடிந்து மாணவி வெளியே வந்தபோது, சக மாணவர்களான பசுபதி  மற்றும் சந்தன பாண்டியன் மாணவியின் ஹால்டிக்கெட் மற்றும் புத்தகங்களை வாங்கி கிழித்துள்ளனர். இதனால் மாணவி அவமானத்தில் மூழ்கியிருக்கிறார்.

பின்னர் தனது வீட்டிற்கு வந்து நடந்ததை பெற்றோரிடம் கூறி வேதனைப்பட்டிருக்கிறார். பெற்றோர்களும் இதுகுறித்து விசாரிப்போம் என கூறியிருக்கின்றனர். இருப்பினும் மீண்டும் தேர்வு எழுத முடியாத சோகத்தினாலும், ஹால் டிக்கெட் கிழிக்கப்பட்ட அவமானத்தினாலும் வித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் பாரூர் காவல்நிலையத்தில் அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனிடையே மாணவியின் தற்கொலைக்கு காரணமான இரு மாணவர்களை கைது செய்ய வலியுறுத்தி காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனை முன்பு வித்யாவின் உறவினர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் போலீசார் உறுதி அளித்ததோடு அவர்களையும் அந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரிசெய்தனர். அத்தோடு மட்டுமில்லாமல் சம்பந்தப்பட்ட இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.