செய்தியாளர்: அ.ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல் இலங்கைக்கு மிக அருகே இருக்கிறது. இதனால், சமீப காலமாக இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக நாட்டு படகு மூலம் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை கிராமங்களுக்கு தங்கம் அதிகளவு கடத்தி வரப்படுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை இலங்கையில் இருந்து படகு மூலம் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கம் கடத்தி வர இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் மதுரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரும் கடற்கரை கிராமமான மண்டபம், வேதாளை, களிமண்குண்டு, மரைக்காயர் பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்திருந்தனர். ஆனால் இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகளை படகு மூலம் கடத்தி வந்த நபர் காரில் மதுரை நோக்கிச் செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அந்த காரை பின் தொடர்ந்தனர்.
அப்போது திருப்பாச்சேத்தி சுங்கச்சாவடி அருகே வைத்து மதுரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த காரில் கடத்தல் தங்கக் கட்டிகள் இருந்தது தெரிய வந்தது இதையடுத்து தங்கத்தை பறிமுதல் செய்த வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் கடத்தலில் ஈடுபட்டதாக கீழக்கரையைச் சேர்ந்த சேக் சதக், சாதிக் அலி ஆகிய இருவரையும் கைது செய்து மதுரையில் உள்ள வருவாய் புலனாய்வுத் துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பிடிபட்ட தங்கம் இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டதாகவும் அதில்; 6 கிலோ 600 கிராம் தங்கம் இருந்ததாகவும் அதன் மதிப்பு ரூ.4.56 கோடி என மதுரை வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் இலங்கை புத்தளத்தில் இருந்து தமிழகத்திற்கு கடத்தி வரப்பட்ட 5 கிலோ தங்க கட்டிகள் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்த நிலையில் ராமநாதபுரம் அருகே சுமார் 6.6 கிலோ தங்கம் பிடிபட்டது பாதுகாப்பு வட்டார அதிகாரி மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.