குற்றம்

குறைந்த விலையில் போலி சோனி டிவி: நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

குறைந்த விலையில் போலி சோனி டிவி: நூதன மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது

kaleelrahman

திருச்சியில் குறைந்த விலைக்கு சோனி டிவி தருவதாக போலி சோனி டிவியை விற்பனை செய்த 3பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 153 டிவிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்தவர் சவுக்கத் அலி. இவர் திருச்சி, பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் உள்ள திருச்சி எலக்ட்ரானிக்ஸ் என்ற கடையில் 32 இன்ச் சோனி டிவியை 9 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆனால் அதற்கு பில் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்டிற்கு புதிய டிவியை கொண்டு சென்ற அவர் ஆன் செய்தபோது டிவி ஆன் ஆகவில்லை. உடனே இதுகுறித்து அந்நிறுவனத்தில் கேட்டபோது சோனி நிறுவனத்தின் சர்வீஸ் சென்டரில் சென்று பழுது பார்த்துக் கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதன்பேரில் அந்நிறுவனத்தின் சர்வீஸ் சென்டருக்கு சென்று கேட்டபோது இது தங்களுடைய கம்பெனி டிவி அல்ல என்றும், இதில் போலி ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியதை அடுத்து, பாலக்கரை காவல் நிலையத்தில் சவுக்கத் அலி புகார் அளித்தார். 


இதனைத்தொடர்ந்து காவல்நிலைய ஆய்வாளர் ஆரோக்கியதாஸ் தலைமையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சோனி பெயரில் இருந்த அனைத்து டிவிக்களும் போலி ஸ்டிக்கர் தயாரித்து ஒட்டி விற்கப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அங்கிருந்த 153 டிவிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், பீமநகர் கண்டிதெருவை சேர்ந்த நிஜாமுதீன் (30), முகமது பைசல் (21), பெட்டவாய்த்தலையைச் சேர்ந்த சரவணன் (23) ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர் .

மேலும் சோனி நிறுவன அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட இந்த டிவிகளை நேரடியாக பார்த்து சான்றிதழ் அளிக்க உள்ளனர்.