சொத்தை எழுதித்தர மறுத்ததாலும், போதையிலும் பெற்றோரை மகன்கள் கொன்ற வெவ்வேறு சம்பவங்கள் தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் அரங்கேறியுள்ளன.
தஞ்சை மவட்டம் திருவையாறு அருகே வரகூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு திருமணமாகி ஒரு மகன், மகள் இருக்கிறார்கள். திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவரும் ராஜா, வரகூர் கிராமத்தில் உள்ள தனது தாய் தந்தையை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, வீட்டை தனது பெயரில் எழுதிவைக்க கோரி தகராறு செய்த ராஜா, பெற்றோர் அதற்கு மறுக்கவே இருவரையும் கத்தியால் குத்தினார். இதில் தாய் ஜெயராணி உயிரிழந்தார். அத்துடன் தந்தை ஜெபாஸ்டின் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இதேபோன்று திருத்துறைப்பூண்டியை அடுத்த மணலி கிராமத்தில் கூலித் தொழிலாளியான முருகேசன், குடிபோதையில் அடிக்கடி தந்தை சங்கரனுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், முருகேசன் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து தந்தையிடம் சாப்பாடு கேட்டு தகராறு செய்துள்ளார். தந்தை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த முருகேசன், கட்டையால் அவரை தாக்கியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் சரிந்த சங்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.