குற்றம்

புனே: மது அருந்த பணம் தர மறுத்த தாய் - அடித்துக் கொலைசெய்த மகன்

புனே: மது அருந்த பணம் தர மறுத்த தாய் - அடித்துக் கொலைசெய்த மகன்

Sinekadhara

புனேவில் மது அருந்த பணம் கொடுக்காததால் பெற்ற தாயையே மகன் கொலைசெய்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

புனேவின் நார்ஹே பகுதியிலுள்ள அபினவ் கல்லூரி சாலையில் வசித்து வருபவர் சச்சின் குல்தே(31). இவருடைய தாயார் விமல் டக்கோபந்த் குல்தே(60). 12ஆம் வகுப்புவரை படித்துள்ள சச்சின் குல்தே பகுதிநேர ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கிறது. சச்சினின் குடிப்பழக்கத்தால் மனைவி மற்றும் மகன் தனியாக வசித்துவருகின்றனர். இந்நிலையில் தனது தாயாருடன் வசித்துவந்த சச்சின் மது அருந்த பணம் தராததால் தாயாரையே கொலைசெய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

இதுகுறித்து சச்சினின் 44 வயது சகோதரி போலீசில் புகார் அளித்திருக்கிறார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘’சச்சின் ஏற்கெனவே தனது தாயாரை கொன்று கட்டிலில் படுக்கவைத்துவிட்டு தனது சகோதரி வீட்டிற்கு சென்று தாயார் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். உடனே அவர்கள் வீட்டிற்கு வந்தபோது யாரிடமும் கூறாமல் நேரடியாக இடுகாட்டிற்கு கொண்டுசென்றுவிடலாம் என சச்சின் கூறியிருக்கிறார். ஆனால் அவரது சகோதரி தாயாரைப் பார்க்க மேலேசென்றபோது சச்சின் கீழேயே இருந்திருக்கிறார். போலீசாருக்கு தகவல் தெரிவிப்பதாக கூறியவுடன் சச்சின் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அவரது சகோதரி புகாரில் தெரிவித்திருக்கிறார்’’ என்று கூறினர்.

மேலும், சச்சினின் தந்தை சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், தாயாரிடம் சிறிது நிலம் இருப்பதால் அதை தரச்சொல்லி சச்சின் அடிக்கடி தாயாரை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் சகோதரி போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார். விமலின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பியதில் உடலில் கூரிய ஆயுதம் மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கிய காயம் மற்றும் உடலில் பல குத்துகள் இருப்பதாக போலீசார் தெரிவித்திருக்கின்றனர். மேலும் அதற்குமுன்பே அடிக்கடி கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கிய காயங்கள் விமலின் உடலில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்திருக்கின்றனர். தப்பியோடிய சச்சினை கைதுசெய்த போலீசார் அவர்மீது இந்திய சட்டப்பிரிவு 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.