உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில், சகோதரிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்டது தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
லக்கிம்பூர் கேரி மாவட்டம் லால்பூர் கிராமத்தில், புதன்கிழமை மாலையில், 17 மற்றும் 15 வயதுடைய சிறுமிகள் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டடெடுக்கப்பட்டனர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த இரு சிறுமிகளின் மரணம் லால்பூரில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நிகாசன் சாலை சந்திப்பில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
சிறுமிகளின் மரணம் தொடர்பாக சுஹைல், ஜூனைத், ஹபிசுல், ரஹ்மான், கரிமுதீன், ஆரிஃப் மற்றும் சோட்டு ஆகிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றவாளிகள் மீது கொலை, காயப்படுத்துதல், வீட்டிற்குள் அத்துமீறி நுழைதல், வன்புணர்வு பிரிவுகளிலும், போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிறுமிகள் மாட்டிற்கு தீவனம் வெட்டிக்கொண்டிருந்தபோது, பக்கத்து கிராமத்தைச்சேர்ந்த மூன்று பேர் மோட்டார் சைக்கிளில் வந்து தனது மகள்களை கடத்திச்சென்றதாக தாய் புகார் அளித்ததன் பேரில் ஆறு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 6 பேரில் சோட்டு என்பவர், சுஹைல் மற்றும் ஜூனைத்தை சிறுமிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். இவர்கள் இருவரும் சிறுமிகளை கடத்திச்சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து தங்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சிறுமிகள் இவர்களை கோரிய நிலையில், இருவரையும், சுஹைல் மற்றும் ஜூனைத் இருவரும் சேர்ந்து கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டதாக தெரிகிறது. தடயங்களை மறைக்க மற்ற நண்பர்கள் உதவியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமிகளின் உடல்கள் கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இருமகள்களையும் கொன்றவர்களை தூக்கிலிடவேண்டும் என்று பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை சிறையில் இருந்து விடுவிப்பவர்களிடம் பெண்களின் பாதுகாப்பை எப்படி எதிர்பார்க்கமுடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இதேபோல, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, உத்தரப்பிரதேச எதிர்க்கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.