குற்றம்

சிவகங்கை: மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம்: கணவர் உட்பட 8 பேர் மீது வழக்கு

சிவகங்கை: மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம்: கணவர் உட்பட 8 பேர் மீது வழக்கு

kaleelrahman

காரைக்குடியில் மனைவிக்கு தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவனை போலீசார் கைது செய்தனர். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த பெண்ணிற்கும், திருப்பத்தூரை சேர்ந்த ஹனீப் இப்ராஹீம் மின்ஹால் என்பவருக்கும் கடந்த 25.01.2016 ஆண்டு இஸ்லாம் வழக்கப்படி இரண்டு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. இதில் வரதட்சணையாக மாப்பிள்ளை வீட்டார் 101 பவுன் நகை பெற்றதாக கூறப்படுகிறது. தற்போது இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், மதுரைக்கு குடிபெயர்ந்த ஹனீப், மற்றும் அவரது குடும்பத்தார்கள் மேலும் வரதட்சனை கேட்டு பெண்ணை கொடுமைபடுத்தியதாக தெரிகிறது.  அதற்கு பெண் சம்மதிக்காததால், கடந்த வருடம் தனது மனைவியை காரைக்குடியில் உள்ள அவரது தாயார் வீட்டில் விட்டு விட்டு, சென்னைக்கு சென்றுள்ளார் ஹனீப்.

இந்நிலையில், திடீரென கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஹனீப் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே காக்கூர் கிராமத்தில் தனது மனைவி குடும்பத்தாருக்கு தெரியாமல் வேறு ஒரு முஸ்லீம் பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக அவரது மனைவிக்கு கணவனின் உறவினர்கள் மூலம் தகவல் வந்தது. அதிர்ச்சி அடைந்த பெண்ணின் தந்தை அப்பாஸ், சம்பவம் குறித்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்தும் போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அப்பாஸ் மனு செய்தார்.

இதனையடுத்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்பேரில், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக ஹனீப் இப்ராஹீம் மின்ஹால் மீதும், இதற்கு உடந்தையாக இருந்த காக்கூர் பள்ளி ஜமாத் தலைவர் அஸ்ரப் அலி உட்பட 8 பேர் மீது காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மதுரையில் இருந்த ஹனீப்பை இன்று அதிகாலை கைது செய்து காரைக்குடி அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான காக்கூர் ஜமாத் தலைவர் அஸ்ரப் அலி, ஹனீப்பின் தந்தை நூர்முகம்மது மற்றும் வழக்கில் சம்பந்தபட்ட மேலும் 5 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.