Accused pt desk
குற்றம்

சீர்காழி: முதியவரிடம் ரூ.12 லட்சம் பணத்தை பறித்துச் சென்ற இருவர் கைது

சீர்காழியில் முதியவரிடமிருந்து ரூ.12 லட்சத்தை பறித்துச் சென்ற மர்ம நபர்கள். சிசிடிவி காட்சி அடிப்படையில் இருவரை கைது செய்த போலீசார் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

webteam

செய்தியாளர்: ஆர்.மோகன்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது மைதீன் (60). இவர் வெற்றிலை உள்ளிட்ட பொருட்களை மொத்த வியாபாரம் செய்து வருகிறார். அப்படி இவர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளுக்கு பொருட்களை விற்பனை செய்துவிட்டு, வாரத்தில் ஒருநாள் பணத்தை வசூல் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், இவரிடம் 25 ஆண்டுகளாக வேலை செய்துவரும் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் (65), சீர்காழி கடைவீதியில் ரூ. 12 லட்சம் பணம் வசூலித்து விட்டு நடந்து சென்றுள்ளார்.

Police station

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பணப்பையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து முகமது மைதீனுக்கு, மாரியப்பன் தகவல் தெரிவித்தார். பின்னர், சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், டிஎஸ்பி ராஜ்குமார் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, தப்பிச்சென்ற மர்ம நபர்களை தேடிவந்தனர்.

இதனிடையே சீர்காழி புறவழிச் சாலையில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், உதவி ஆய்வாளர் அசோக்குமார் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி விசாரனை செய்தனர். அதில் வந்த இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் சந்தேகமடைந்த போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

Arrested

விசாரணையில், அவர்கள் சீர்காழி பகுதியை சேர்ந்த பிரேம்குமார் (22), தஞ்சாவூர் பகுதியை சேர்ந்த முகமது பாசித் (19) என்பதும், இவர்கள்தான் சீர்காழியில் முதியவரிடம் வசூல் பணத்தை பறித்துச் சென்றவர்கள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணத்தையும், திருட்டுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.