சீர்காழியில் விசாரணைக்கு அழைத்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் அர்ஜுனன். இவர், கடந்த 19 ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக புத்தூர் பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரை தொலைபேசியில் அழைத்துள்ளார் அப்போது பேசிய செந்தில், தான் ஒரு மிகப் பெரிய ரவுடி என்றும் தன்னை விசாரணைக்கு அழைத்தது தவறு என்றும் எச்சரித்து ஆபாசமாக பேசி சிறப்பு காவல் உதவி ஆய்வாளருக்கு பகிரங்க கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பான தொலைபேசி உரையாடல் சமூக வலைதளங்களில் பரவியது. அந்த ஆடியோவில், “உங்களுக்கு பசங்கல்லாம் இருக்கா? பாத்துங்கய்யா.... தேவையில்லாம ரிஸ்க் எடுக்கவேண்டாம். நல்லதில்ல. நான் யாரு என்னென்னு உங்களுக்குத் தெரியாது. புரிதா? இந்த பூச்சாண்டி வேல காட்டுறதெல்லாம் என்கிட்ட வேணாம். அப்புறம் நீயே இருக்கமாட்ட... புள்ள குட்டிங்களோட இருக்க... ஒழுங்கா பாத்து இரு. சாவடிச்சு போட்டுருவேன் உன்ன...விடிஞ்சா நீ இருக்கமாட்ட...நீ யாருன்னு எனக்கு தெரியாது. என்னோட நம்பர் வாங்கி என்னனு பேசுற நீ? உன்னால என்ன முடியும்? உனக்கு குடும்பம் இருக்கு பாத்துக்க... சுத்தமா உன்ன இல்லாம ஆக்கி விட்ருவ... டேய் யாருடா நீ? இந்த பூச்சாண்டி வேலைல்லாம் வேற எங்காது வெச்சுக்க.
நாங்க யாரு... எங்க டீம் என்னனு எல்லாம் உனக்கு தெரியாது. உன்னால முடிஞ்ச என்ன வேணாலும் நீ பண்ணிக்க. ஆனா நீ இருக்கமாட்ட. ரெண்டு நாளுக்கு அப்புறம் நீயே இருக்கமாட்ட பாத்துக்க...அவன் ஒரு ஆளுன்னு வந்து சொல்லுவானாம்... நீ என்கிட்ட பேசுவியாம்... எவன்கிட்ட போய் சண்ட போட்டனோ அவன்கிட்ட போய் நம்பர் வாங்கி பேசு. ஊருக்குள்ள போய் ரகள பண்ணிட்டு இருக்கான். சண்ட போடுறான். அதெல்லாம் கேட்குறதுக்கு துப்பில்ல. என்கிட்ட போன் பண்ணி பேசுற... நான் யார் தெரியுமா உனக்கு? பாத்து இருந்துக்க... நான் பேசுறதகூட ரெக்கார்டு பண்ணி வெச்சுக்க. உன்னால முடிஞ்சத நீ பாரு. நீ என்ன வேணா பண்ணிக்க’’ என்று ரவுடி மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், மேற்படி ரவுடி செந்தில் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் அர்ஜுனன் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சீர்காழி போலீசார் தனிப்படை அமைத்து ரவுடி செந்திலை தேடிவந்தனர்.
இந்நிலையில், போலீசார் தேடுவதை அறிந்த செந்தில், தப்பிச் செல்வதற்காக சீர்காழி பேருந்து நிலையத்தில் பதுங்கியிருந்தார். அப்போது போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை பணி செய்ய விடாமல் தடுத்தது ஆபாசமாக பேசியது கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்