சீர்காழி அருகே வரசட்சணைக் கொடுமையால் திருமணம் ஆன 4 மாதத்தில் புதுப்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட கரைமேடு கிராமத்தில் வசிக்கும் மோகனசுந்தரம் - உஷாராணி ஆகியோரின் மூத்த மகள் தர்ஷிகா( 26). இவரை சீர்காழி வட்டம் மேலமாத்தூர் கிராமத்தில் வசிக்கும் மாயகிருஷ்ணன் - ஜெகதாம்பாள் தம்பதியினர் மகன் கார்த்தி என்கிற பாலமுருகனுக்கு கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இரு வீட்டார் சம்மதத்துடன் சீர்காழியில் உள்ள திருமண மண்டபத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான சீர்வரிசை கொடுத்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் திருமணமான 2 மாதத்தில் கணவர் கார்த்தி, ஒப்பந்தப்பணி எடுத்து வேலை செய்ய ரூ 4 லட்சம் வரதச்தட்சணையாக வாங்கி வரச்சொல்லி மனைவி தர்ஷிகாவிடம் அடிக்கடி சண்டை போட்டதாகத் தெரிகிறது. இதனால் மன உளைச்சல் தாங்காத தர்ஷிகா, தாய் வீட்டில் வசித்து வந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். இதனிடையே ஊர் முக்கியஸ்தர்கள் இரு வீட்டாரிடம் சமாதானம் பேசி, கடந்த ஜூன் 5-ம் தேதி கணவர் கார்த்தி வீட்டில் தர்ஷிகாவை சேர்த்து வைத்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூன் 30-ம் தேதி தர்ஷிகா வெண்ணீர் ஊற்றிக் கொண்டதாக தாய் வீட்டிற்கு தகவல் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் அவர்கள் சென்று பார்த்தப்போது அவரது கழுத்துப்பகுதியில் இருந்து கால் வரை தீ காயத்துடன், சீர்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜ முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்ற தர்ஷிகா, கடந்த 24-ம் தேதி சிகிச்சை பலனின்றி சிதம்பரம் மருத்துவமனையில் காலமானார். இதுகுறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிதம்பரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனது மகள் இறந்தவுடன், கணவர் கார்த்தி மற்றும் அவரது தாய், தந்தை உள்ளிட்ட உறவினர்கள் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி மண்ணெண்னை ஊற்றி கொளுத்தியதால், சிகிச்சை பலனின்றி மகள் தர்ஷிகா இறந்துவிட்டதாக சிதம்பரம் கோட்டாட்சியரிடம் உறவினர்களுடன் சென்று அவரது தந்தை மோகனசுந்தரம், புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் இறந்துபோன தர்ஷிகாவின் உடலை, சிதம்பரம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளித்துள்ளனர்.
மேலும் தர்ஷிகா கணவர் வீட்டார் கொடுமைப் படுத்துவதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாகவும் தெரிகிறது. அத்துடன் மருத்துவமனையில் சிகிச்சையின்போது அவருக்கு நேர்ந்த கொடுமை குறித்து பேசியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வுசெய்து “இது பெட்ரோலும் அல்ல, மண்ணெண்ணையும் அல்ல, இந்த பெண் மீது ஏதோ ஒரு வித்தியாசமான திரவப் பொருளை ஊற்றி எரித்து உள்ளனர்.
பிரேதப் பரிசோதனை செய்வதற்கான வசதி சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் இல்லாததால், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்குமாறு” உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து உயிரிழந்த தர்ஷிகாவின் உடலை அண்ணாமலை நகர் போலீசார் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.