திருச்சி நவல்பட்டு காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட வழக்கில் சிறார்கள் இருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய சிறப்பு உதவி ஆய்வாளர் கொலைவழக்கு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆடு திருடும் கும்பல் தப்பிச் செல்வதும் அவர்களை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் விரட்டிச்செல்வதுமாக கிடைத்த சிசிடிவி காட்சிகள், செல்போன் சிக்னல்களும் கொலையாளிகளை காட்டிக் கொடுத்துள்ளது.
திருச்சி பூங்குடி காலனி பகுதியில் இருந்து தப்பமுயன்ற ஆடு திருடர்களை விரட்டிய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், மாவட்ட எல்லையை கடந்து புதுக்கோட்டையில் உள்ள கீரானூர் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டி பகுதியில் மடக்கி பிடித்துள்ளார். இதுகுறித்து திருச்சி நவல்பட்டு காவல்நிலையத்தில் தன்னுடன் பணிபுரியும் சிறப்பு உதவி ஆய்வாளர் சேகருக்கு தகவலை தெரிவித்து, தான் இருக்கும் இடத்தின் லோக்கேஷனையும் செல்போனில் அனுப்பியுள்ளார். அதேநேரத்தில், திருடர்களில் இரண்டு சிறுவர்கள் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன், அதில் 9 வயதுடைய சிறுவனின் தாயார் செல்போன் எண்ணைப் பெற்று 23 நிமிடங்கள் பேசியுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, இரவு மற்றும் பழக்கப்படாத இடம் என்பதால் சக காவலர்களால் குறித்த இடத்திற்கு வந்துசேருவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தை பயன்படுத்தி மணிகண்டன் என்பவர் பூமிநாதனின் காலை வாரி கீழே தள்ளிவிட்டு, தான் வைத்திருந்த ஆடு வெட்டும் அரிவாளால் அவரது பின் தலைமையில் வெட்டியதாகவும், இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது. இந்த படுகொலையில் இரண்டு சிறுவர்களும் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் பூமிநாதன் தனது செல்போனில் 23 நிமிடங்கள் பேசிய பெண்ணை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்பெண்மணி தான் கைது செய்யப்பட்டிருக்கும் 9 வயதுடைய சிறுவனின் தாயார் என்பதும், கபடி விளையாடச் செல்வதாக உறவினரான மணிகண்டன் தனது மகனை அழைத்துச்சென்றார் என்று கூறியதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இதனையடுத்து மணிகண்டன் மற்றும் இரு சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மணிகண்டனையும், சிறார்களுக்கான நீதிக்குழு நீதிபதி முன்பு இரு சிறுவர்களையும் ஆஜர்படுத்தினர். நீதிபதிகள் உத்தரவின்பேரில், மணிகண்டனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் திருமயம் கிளை சிறையிலும், சிறுவர்கள் இருவர் சிறார் சீர்திருத்தப் பள்ளியிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.