குற்றம்

'வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கிறார்’- காவல்துறையை அதிரவைத்த மர்ம புகாரின் அதிர்ச்சி பின்னணி

'வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கிறார்’- காவல்துறையை அதிரவைத்த மர்ம புகாரின் அதிர்ச்சி பின்னணி

webteam

ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனம் ஜப்பானிலிருந்து பேசுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நேற்று காலை தமிழ்நாடு மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அழைப்பில் பேசிய நபர் ஜப்பானிலிருந்து பேசுவதாக கூறி, மாங்காடு பகுதியிலுள்ள முத்தமிழ் நகரில் கபீர் முகமது என்பவர் வெடிகுண்டு பொருட்களை தயாரிக்கும் வேலை செய்து வருவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து மாங்காடு போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்பநாய் உதவியுடன் அந்த முகவரியில் சோதனை செய்தனர். இதனைக் கண்டதும் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அந்த வீட்டில் விசாரித்த போது ஏற்கனவே கொலை வழக்குகள் தொடர்புடைய வேறு ஒரு நபர் அங்கு குடும்பத்துடன் வசித்து வந்தது தெரியவந்தது.

அந்த வீட்டில் இருந்தவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கபீர் முகமது என்பவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்ததாக தெரிவித்துள்ளார். மேற்கொண்டு கபீர் முகமது பற்றி ஆய்வு செய்ததில், அவர் தற்போது புழல் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், கடந்த ஆண்டு கபீர் முகமதுவிற்கு நடந்த சாலை விபத்தில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்ததும் தெரியவந்துள்ளது. அந்த விபத்துக்குப் பின் மருத்துவ சிகிச்சைக்காக அவர் இந்த முகவரியை பயன்படுத்தி ஆன்லைன் லோன் அப்ளிகேஷன் மூலமாக ரூபாய் 58,000 வீதம் ரூ.5 லட்சத்திற்கும் மேல் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் இருந்து வந்துள்ளார் என்றும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

இதன் காரணமாகவே ஆன்லைனில் கடன் வழங்கிய நிறுவனத்தினர், கபீர் முகமதுவை போலீசில் சிக்க வைப்பதற்காக அவர் வெடிகுண்டு தயாரிக்கும் வேலையை செய்வதாக கூறியது தெரியவந்து. இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

ஆன்லைனில் கடன் வாங்கி கட்டிய நபர்களை மிரட்டும் வகையில், அவர்களது புகைப்படங்கள் மற்றும் குடும்பத்தினரின் புகைப்படங்களை அவதூறாக சித்தரித்து, அவரது செல்போனில் உள்ள நம்பர்களுக்கு அனுப்பி மன உளைச்சல் ஏற்படுத்துவது போன்றவை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் கடன் வாங்கி கட்டாத நபரை போலீசில் சிக்க வைக்க வெடிகுண்டு தயாரிக்கும் தொழிலை அவர் செய்வதாக கூறியது, அதுவும் தாங்கள் ஜப்பானில் இருந்து பேசுவதாக கூறியது என்ற இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.