குற்றம்

போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கான் மகனின் ஜாமீன் மனு தள்ளுபடி

Sinekadhara

போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

வார இறுதி நாளான சனிக்கிழமை மதியம் மும்பையில் இருந்து கோவாவுக்கு 'எம்பிரஸ்' என்ற உல்லாசக் கப்பல் புறப்பட்டது. அப்போது போதைப் பொருள் தடுப்புப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் 20 பேர் அதில் பயணிகள் போல் ஏறிக் கொண்டனர். சொகுசு கப்பலில் இரவு நடன நிகழ்ச்சி நடைபெற்ற போது, அனைவருக்கும் போதைப் பொருள் விநியோகிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அதிகாரிகள் போதைப் பொருட்களை விநியோகம் செய்த இரண்டு பெண்கள் உட்பட 8 பேரை சுற்றி வளைத்தனர்.

கப்பல் நடுக்கடலில் சென்று கொண்டிருந்த போது அதிரடி நடவடிக்கையில் இறங்கிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள், அவர்கள் எட்டு பேரிடமும் தனித்தனியே விசாரணை நடத்தினர். அவர்களில் ஒருவர் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் என தெரியவந்தது. அவரது வாட்ஸ் ஆப் சாட் மூலம் பல்வேறு ஆதாரங்களை திரட்டியுள்ள போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள், இந்த விவகாரத்தில் நெட்வொர்க்கை கண்டறிய தீவிரம் காட்டி வருகின்றனர். 8 பேரிடமும் சுமார் 20 மணி நேரம் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், ஆர்யன் கான் உள்ளிட்ட 3 பேரை கைது செய்தனர்.

ஆர்யன் கானுடன் கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு பேரை விசாரிக்கவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆர்யன் கான் ஜாமீன் கோரியிருந்த நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்தது. இந்நிலையில் 3 நாட்கள் காவல் முடிந்ததும் ஆர்யன் கானை மும்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது என்.சி.பி. இதுகுறித்து மத்திய அரசின் போதை தடுப்பு பிரிவு தொடர்ந்த வழக்கில் ஆர்யன் கான் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.