குற்றம்

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை - வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகள்

பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை - வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகள்

சங்கீதா

வேலூரில் ஆட்டோவில் சென்ற பெண் மருத்துவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தின் எதிரொலியாக, ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் சுயவிவரத்தை வாகனங்களில் காட்சிப்படுத்த வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

வேலூரில் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை ஒரு கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். இதுதொடர்பாக கடந்த 22-ம் தேதி பெண் மருத்துவர் அளித்த புகாரின் பேரில், 2 சிறார்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தமிழகத்தையே கொந்தளிப்பில் ஆழ்த்தியிருக்கிறது இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம்.

இதைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் கண்காணிப்பை பலப்படுத்தியிருக்கிறது காவல்துறை. அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம் காவல்துறை உயரதிகாரிகள் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், இரவு நேரக்களில் இயக்கப்படும் ஆட்டோக்களுக்கு தீவிர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆட்டோவின் பின்புறம், ஓட்டுநரின் ஐ.டி.எண், அவரின் செல்ஃபோன் எண், உரிமையாளரின் பெயர் மற்றும் முகவரி ஆகியவை ஒட்டப்பட்டிருக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. ஆட்டோவின் உள்ளே ஓட்டுநரின் உரிமம், வாகன சான்று உள்ளிட்டவை பயணிகளுக்கு தெரியும்படி காட்சிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஆட்டோ ஓட்டுநர்கள் கட்டாயமாக கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், விதிகளை மீறுவோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துள்ளனர். இந்நிலையில், இந்த உத்தரவை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.