திண்டிவனம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பஸ் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு, பாலியல் தொந்தரவு கொடுத்த தனியார் பஸ் டிரைவரை கைது செய்த போலீசார், மற்றொருவரை தேடி வருகின்றனர். திண்டிவனம் அடுத்த ஆட்சிப்பாக்கம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி மணிபாலன் என்பவரின் மனைவி பரிமளா, (35). இவர் மாற்றுத்திறனாளியான இவருக்கு ஒரு மகனுன், மகளும் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த 11ஆம் தேதி பரிமளா, ஆட்சிப்பாக்கத்தில் இருந்து ஆவணிப்பூரில் உள்ள இந்தியன் வங்கிக்கு செல்ல மெயின் ரோட்டில் நின்றிருந்தார். அப்போது, ஆட்சிப்பாக்கத்தை சேர்ந்த தனியார் பஸ் டிரைவரான ஏழுமலை என்பவரின் மகன் ரவிபாபு (33). மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த வீரகாந்தன் என்பவரின் மகன் மகேந்திரன் (32) ஆகியோர் பரிமளாவை, வங்கியில் இறக்கி விடுவதாகக் கூறி பைக்கில் அழைத்து சென்றனர்.
ஆவணிப்பூர் அரசு உயர்நிலைப்பள்ளி பின்புறம் மின்துறை அலுவலகம் செல்லும் ரோட்டில், இருவரும் சேர்ந்து பரிமளாவிற்கு பாலியல் தொந்தரவு தந்து விட்டு, மீண்டும் அழைத்து வந்து வங்கி வாசலில் இறக்கி விட்டு சென்றுள்ளனர்.
பின்பு அங்கிருந்து வீட்டிற்கு வந்த பரிமளா அழுதுகொண்டே இருந்துள்ளார். அவரிடம் கணவர் மணிபாலன் மற்றும் அவரது பெற்றோர் விசாரித்துள்ளனர். அதில், ரவிபாபு, மகேந்திரன் ஆகியோர் சேர்ந்து அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரிய வந்தது.
இது குறித்து பரிமளாவின் தாய் குப்பு (50), திண்டிவனம் மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் லதா வழக்குப் பதிவு செய்து, ரவிபாபுவை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மகேந்திரனை தேடி வருகின்றனர்.