குற்றம்

தியானம் கற்றுத் தருவதாக பாலியல் வன்கொடுமை: சாமியாரும் மனைவியும் போக்சோவில் கைது

தியானம் கற்றுத் தருவதாக பாலியல் வன்கொடுமை: சாமியாரும் மனைவியும் போக்சோவில் கைது

kaleelrahman

வன்கொடுமை செய்ததோடு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக சென்னை பெருநகர ஆணையரிடம் பெண் அளித்த புகாரின் பேரில் சாமியார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் சத்திய நாராயணன் (48). இவரது மனைவி புஷ்பலதா (42). இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில், டிப்ளமோ படித்த சத்திய நாராயணன், தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு கொண்ட அவர், சென்னை கொளத்தூர் சத்யா நகரில் தியான பீடம் அமைத்து தியானம் மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே, புத்தகரம் பகுதியில் வாடகை இடத்தில் தியான பீடத்தை மாற்றி அதனை விரிவுப்படுத்தினார். இதையடுத்து 3-வதாக புழல் கதிர்வேடு அடுத்த பத்மாவதி நகரில் தியான பீடம் அமைத்துள்ளார். இந்த நிலையில் தான், இவர் மீது சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது பெண் புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த 2016ஆம் ஆண்டு புத்தகரத்தில் தியான பீடம் இருந்த போது, தமது பாட்டியுடன் அங்கு சென்றதாகவும் அதன் பின்பு 2017ஆம் ஆண்டு பாட்டிக்கு உடல் நலம் சரியில்லாததால், விபூதி வாங்க அங்கு சென்றபோது, நான் மயங்கிய நிலையில் இருந்ததாகவும், கெட்ட ஆவியை வெளியேற்ற இப்படி செய்ததாக சாமியார் சத்திய நாராயணன் கூறியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து 2018ஆம் ஆண்டு திருமணமாகி கணவர் வெளிநாடு சென்ற நிலையில், எதேச்சையாக தம்மை பார்த்த சாமியார் சத்திய நாராயணன், தியான பீடத்திற்கு வரச்சொல்லி வற்புறுத்தியதாகவும், வரவில்லையெனில், ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதாகவும், அதை கணவரிடம் காண்பித்து விடுவதாக மிரட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் 2020ஆம் ஆண்டு கர்ப்பமடைந்து கடந்த ஜனவரியில் பெண் குழந்தை பிறந்துள்ளதாகவும், இந்த நிலையில் மீண்டும் பாலியல் உறவுக்கு அழைப்பதாகவும் இல்லையேல் தமது கணவரிடம் கூறி விடுவதாகவும் மிரட்டியதாக அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமது கணவருக்கு தகவல் தெரிவித்து அவர் சொன்ன அறிவுரையின்படி, சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்படி, புழல் காவல் நிலையத்தில் செயல்பட்டு வரும் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தற்கு புகார் அனுப்பப்பட்டது. புகாரை பெற்றுக்கொண்ட ஆய்வாளர் கண்ணகி, சாமியார் சத்திய நாராயணன் மற்றும் அவரது மனைவி புஷ்பலதா ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதைத் தொடர்ந்து கற்பழிப்பு, மிரட்டல், மைனர் பெண்ணை கற்பழித்தது என 3 பிரிவகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சத்திய நாராயணன், அவரது மனைவி புஷ்பலதா ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்திய நாராயணனை திருவள்ளூர் கிளை சிறையிலும், புஷ்பலதாவை புழல் மகளிர் சிறையிலும் அடைத்தனர்.