குற்றம்

20 பெண்களை கொன்ற ’சயனைடு’ மோகனுக்கு 4-வது வழக்கில் ஆயுள்!

20 பெண்களை கொன்ற ’சயனைடு’ மோகனுக்கு 4-வது வழக்கில் ஆயுள்!

webteam

பாலியல் வன்கொடுமை செய்து, பெண்களை கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சயனைடு மோகன், மற்றொரு இளம்பெண் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ளார். 

கர்நாடக மாநிலம் பண்ட்வால் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். ஆசிரியரான இவர், கடந்த 2003ம் ஆண்டில் இருந்து 2009ம் ஆண்டுக்குள் 20 பெண்களை சயனைடு கொடுத்து கொன்றார். இதில் சுள்ளியா பகுதியைச் சேர்ந்த சுனந்தா, வம்படபதவு பகுதியைச் சேர்ந்த லீலாவதி, பாரிமார் பகுதியைச் சேர்ந்த அனிதா ஆகிய பெண்களை சயனைடு கொடுத்து கொன்றது நிரூபிக்கப்பட்டு 2013-ம் ஆண்டு நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் இவரால் கொலை செய்யப்பட்ட புத்தூர் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் தொடர்பான வழக்கு, மங்களூரு ஆறாவது கூடுதல் மாவட்ட மற்றும் செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி டிடி புட்டரங்கசாமி முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கிலும் மோகன் குமார் குற்றவாளி என்ற நீதிபதி, தண்டனை விவரத்தை நேற்று அறிவித்தார். மோகன் குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.26 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். 

இதன் மூலம் அவரால் கொலை செய்யப்பட்ட 20 பெண்களில் 4 பெண்களின் வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் 16 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.