குற்றம்

போக்குவரத்து துறை அதிகாரியிடம் கணக்கில் வராத பணம்: அதிரடி காட்டிய போலீஸார்

போக்குவரத்து துறை அதிகாரியிடம் கணக்கில் வராத பணம்: அதிரடி காட்டிய போலீஸார்

நிவேதா ஜெகராஜா

போக்குவரத்து துறை துணை ஆணையரின் உதவியாளர் அறையில் இருந்து கணக்கில் வராத 1.79 லட்சம் பணம் பறிமுதல்.

சென்னை மாவட்ட போக்குவரத்து துறை துணை ஆணையராக இருந்து வரும் நடராஜன் அலுவலகத்தில் 14-ம்தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 35லட்சம் ரூபாய் மற்றும் சில முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் துணை ஆணையரான நடராஜன் வாகனங்களை பதிவு செய்யவும், உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் லஞ்சம் பெற்று வந்ததும் தெரியவந்தது. கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்க தலா 5லட்சம் வீதம் 35 உதவியாளர்களிடமிருந்து லஞ்சம் பெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று துணை ஆணையர் நடராஜனின் உதவியாளராக பணிபுரிந்து வரும் முருகன் என்பவர் சேப்பாக்கத்தில் தங்கி வந்த அறையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டதில் கணக்கில் வராத பணமான 1.79லட்சத்தை பறிமுதல் செய்தனர். நடராஜன் லஞ்சம் பெறுவதற்கு உடந்தையாக இருந்ததாக உதவியாளர் முருகனை இரண்டாவது குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இந்த வழக்கில் சேர்த்துள்ளனர். மேலும் நடராஜன் உதவியாளரிடம் பணத்தை கொடுத்து மறைத்து வைக்க கூறினாரா என்ற கோணங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.