குற்றம்

ஆப்ரேஷன் 'சாகர் கவச்' ஒத்திகையின் போது 'Wanted' ஆக வந்து சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்!

ஆப்ரேஷன் 'சாகர் கவச்' ஒத்திகையின் போது 'Wanted' ஆக வந்து சிக்கிய கஞ்சா கடத்தல் கும்பல்!

kaleelrahman

ஆப்ரேஷன் 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை வாகன சோதனையில் சிக்கிய 10 கிலோ கஞ்சா. ஒடிசாவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருலலை தடுக்கும் விதமாக 'சாகர் கவச்' பாதுகாப்பு ஒத்திகை தற்போது தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலை ஜிம்கானா கிளப் அருகில் திருவல்லிக்கேணி போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றை மடக்கிப் பிடித்த போலீசார் அதில் சோதனை செய்தனர். அதில் ஒரு பையில் 10 கிலோ கஞ்சா பதுக்கி எடுத்துவந்தது தெரியவந்தது.

இதையடுத்து அதில் பயணித்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், சங்கர் மண்டல், ஜக்மோகன் மண்டல், அர்ஜுன் மண்டல் என்பது தெரிய வந்தது.

இவர்கள் ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் கஞ்சா கடத்திச் சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட 4 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.