குற்றம்

பள்ளிச் சிறுமி எரித்துக் கொலை – குற்றவாளிகளை உடனே கண்டறிய சீமான் கோரிக்கை

பள்ளிச் சிறுமி எரித்துக் கொலை – குற்றவாளிகளை உடனே கண்டறிய சீமான் கோரிக்கை

Veeramani

கொடைக்கானல் பள்ளிச் சிறுமியை பட்டப்பகலில் எரித்துக் கொன்ற குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடைக்கானல் அருகே பாச்சலூரிலுள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பச்சிளஞ் சிறுமியைப் பட்டப்பகலில் எரித்துக்கொன்ற செய்தியறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். பிஞ்சுக்குழந்தையை எரித்துக் கொன்ற இக்கோரச்செய்தி நெஞ்சத்தைப் பதைபதைக்கச் செய்கிறது. ஆற்ற முடியாப் பேரிழப்பில் சிக்கித் தவிக்கும் அக்குழந்தையின் பெற்றோர்களுக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன்.

குழந்தையைக் கொடூரமாகக்கொன்ற கொடுங்கோலர்களை உடனடியாக கண்டறிந்து கைதுசெய்து, கடும்சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டுமெனவும், இக்கொடுமைகளை விளைவித்தக் கொலையாளிகளுக்கு சட்டத்தின்படி தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்

மேலும், கோவையில் 15 வயது சிறுமி கொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து கனிமொழி எம்.பி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ கோவையில் 15 வயது சிறுமி, கொலை செய்யப்பட்ட செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்துகிறது. இதைப் போன்ற கொடூரங்கள் நிகழும் ஒவ்வொரு முறையும் நாம் ஒரு சமுதாயமாக எங்கே தவறு செய்தோம் என்ற கேள்வி எழுகிறது. மனித இனத்தின் அனைத்து சாதனைகளையும் அர்த்தமற்றதாக உணர்த்துகிறது. குழந்தைகளுக்கு எதிராக நிகழும் தொடர் வன்முறைகளைத் தடுத்து, அவர்கள் இந்த சமூகத்தில் பாதுகாப்பாக உணர்வதற்கு நாம் வழிவகை செய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்