குற்றம்

ஃபேஸ்புக் காதலால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

ஃபேஸ்புக் காதலால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

Sinekadhara

ஆன்லைன் வகுப்புக்கு வாங்கிக்கொடுத்த செல்போனை வைத்து, ஃபேஸ்புக் மூலம் பழக்கமான நண்பரைப் பார்க்கச் சென்ற பள்ளி மாணவி இருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவையை சேர்ந்த 17 வயது மாணவி தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்து படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி மாணவியை திடீரென்று காணவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் செல்வபுரம் போலீசில் அன்றே புகார் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் மாணவி தனது செல்போனிலிருந்து சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுனரான சண்முகம் (30), கடலூரை சேர்ந்த ஏழுமலை( 29) ஆகியோரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது.

இந்நிலையில், வேளாங்கண்ணி பகுதியில் தான் இருப்பதாக காணாமல் போன மாணவியிடமிருந்து பெற்றோருக்கு அழைப்பு வந்ததை அறிந்து, போலீசார் சிறுமியை மீட்டு கோவைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில, ஃபேஸ்புக் மூலம் தனக்கு பழக்கமான கடலூரை சேர்ந்த சென்னையில் பணியாற்றி வரும் ஏழுமலையை சந்திக்க, தனக்கு ஏற்கனவே தெரிந்த சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த கால் டாக்சி ஓட்டுனரான சண்முகத்தின் உதவியை மாணவி நாடியிருக்கிறார். அவர்கள் திட்டத்தின்படி, கடந்த 29ஆம் தேதி மாணவியை கோவையில் பிக் அப் செய்த சண்முகம், ஊட்டி அழைத்துs சென்று 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து, அவரை திருச்சியில் விட்டுள்ளார். அங்கு மாணவியை சந்தித்த ஏழுமலையும் மீண்டும் 3 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்து விட்டுவிட்டு சென்றுள்ளார்.

வேளாங்கண்ணியிலிருந்து பொதுமக்கள் உதவியுடன் பெற்றோருக்கு போன் செய்து நடந்ததை கூறியுள்ளார். இதனை அறிந்த செல்வபுரம் போலீசார், அங்கிருந்து சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சண்முகம், ஏழுமலை ஆகிய இருவரையும் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர். 2 பேரும் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.