குற்றம்

சத்தியமங்கலம்: சட்ட விரோத மின் வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை - தோட்ட உரிமையாளர் கைது

kaleelrahman

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி அருகே உள்ள அருள்வாடியில் மின்வேலியில் சிக்கி ஆண்யானை உயிரிழந்தது. சட்டவிரோதமாக மின்சாரம் பாய்ச்சி யானையை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த தோட்ட உரிமையாளர் காளையாவை இன்று வனத்துறையினர் கைது செய்தனர். 

சத்தியமங்கலம் அடுத்த ஜீரஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. தீவனம் மற்றும் தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி கிராமத்துக்குள் புகுந்து விவசாயப்பயிர்களை சேதப்படுத்தி வந்தன. அதனால் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகளை காட்டுக்குள் துரத்துகின்றனர்.

இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி வனத்தில் இருந்து வெளியேறிய 20 வயதுள்ள ஆண் யானை அருள்வாடி கிராமத்துக்குள் புகுந்தது. அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த காளையா என்பவர் தனது தோட்டத்தில் ராகி, மக்காச்சோளம் பயிர்களை சாகுபடி செய்துள்ளார்.

தொடர்ந்து வனவிலங்குகள் பயிரை சேதப்படுத்துவதால் பயிர்களை பாதுகாக்க மின்கம்பத்தில் இருந்து சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து தோட்டத்து வேலியில் மின்சாரத்தை பாய்ச்சியுள்ளார். இதையடுத்து அங்கு வந்த யானை ராகி தோட்டத்துக்குள் புகுந்த போது மின்வேலியில் சிக்கி உயிரிழந்தது.

சட்ட விரோதமாக மின்சாரம் எடுத்து மின்வேலியில் பாய்ச்சி யானையை கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த காளையாவை வனத்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் சத்தியமங்கலத்தில் பதுங்கியிருந்த காளையாவை 4 நாள்களுக்கு பிறகு ஜீரஹள்ளி வனத்துறையினர் இன்று கைது செய்து ஈரோடு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.