குற்றம்

சாத்தான்குளம் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இல்லை : பிரேத பரிசோதனையில் தகவல்

சாத்தான்குளம் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் இல்லை : பிரேத பரிசோதனையில் தகவல்

webteam

சாத்தான்குளம் சிறுமி கழுத்து இறுக்கப்பட்டுதான் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்விளை இந்திராநகர் பகுதியில் வசித்து வருபவர் உச்சிமாகாளி. இவருக்கு 10 வயதில் ஒரு மகன் மற்றும் 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது வீட்டில் மின்சாரம் மற்றும் டிவி இல்லாத நிலையில் அவரது மகள் அக்கம் பக்கத்து வீடுகளில் டிவி பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் 15 ஆம் தேதி காலை 11 மணியளவில் உச்சிமாகாளியின் மகள் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த முத்தீஸ்வரன் என்பவரது வீட்டிற்கு டிவி பார்க்க சென்றுள்ளார். இதனையடுத்து சிறுமி காணவில்லை என்று கூறப்படுகிறது. பின்னர் ஊர் பொதுமக்கள், உறவினர்கள் சிறுமியை தேடிய நிலையில் வடலிவிளை பாலத்தின் கீழ் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இது தொடர்பாக சிறுமியின் தாய் உச்சிமாகாளி சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அதே பகுதியைச் சேர்ந்த முத்தீஸ்வரன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் சிறுமியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. பின்னர் இருவர் மீதும் கொலை, கொடுங்காயம் ஏற்படுத்தல்,போக்சோ உள்ளிட்ட 6 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதனிடையே சிறுமியின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இங்கு உடற்கூறு பரிசோதனை முடிவடைந்த நிலையில் அவரது உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சியினர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும், ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு நேரில் விசாரணை நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு 3 செண்ட் நிலம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை சிறுமியின் உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து திருச்செந்தூர் வட்டாட்சியர் ஞானராஜ் மற்றும் கோட்டாட்சியர் தனப்பிரியா, ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பரிமளம் ஆகியோர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது. வன்கொடுமையால் பாதிகப்பட்டவருக்கான நல நிதி முதற்கட்டமாக ரூபாய் 4.28 லட்சம், சிறுமி தாயார் உச்சிமாகாளிக்கு வீட்டுமனை பட்டா, சிறுமியின் 10 வயது சகோதரனுக்கு தேவையான படிப்பு செலவு ஆகியவை அரசு சார்பில் வழங்க பரிந்துரைக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் நாளை மருத்துவமனைக்கு வந்து அந்த குழந்தைக்கு மலர் மாலை வைத்து செல்லட்டும். நாங்கள் உடலை வாங்கிக் கொள்கிறோம் உறவினர்கள் தெரிவித்தனர், இதற்கு அதிகாரிகள் உத்தரவாதம் அளிக்காததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. ஆட்சியர் வரும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்து சென்றுவிட்டனர்.

இந்நிலையில், சிறுமி கழுத்து இறுக்கப்பட்டே உயிரிழந்துள்ளார். பாலியல் ரீதியான எந்த துன்புறுத்தலும் இல்லை என உடற்கூறு ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.