குற்றம்

காவல்நிலையம் முழுவதும் நிறைந்திருந்தது ஜெயராஜ்- பென்னிக்ஸ் ரத்த கறைகள்தான் - சிபிஐ அறிக்கை

காவல்நிலையம் முழுவதும் நிறைந்திருந்தது ஜெயராஜ்- பென்னிக்ஸ் ரத்த கறைகள்தான் - சிபிஐ அறிக்கை

EllusamyKarthik

சாத்தான்குளம் காவல்நிலைய கழிப்பறை சுவர்கள், லத்தி, மேஜைகளில் படிந்திருந்த ரத்தக் கறைகள் ஜெயராஜ்- பென்னிக்ஸ் டி.என்.ஏவுடன் ஒத்துப்போவதாக மத்திய தடயவியல் துறையின் பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்திருந்த குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ  குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றிருந்த தகவல்கள் சில தற்போது வெளியாகியுள்ளது. அதில் ,"தந்தை மகன் இருவரும் பொய்யான குற்றச்சாட்டில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இருவர் மீதும் சாத்தான்குளம் காவலர்கள் மிருகத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இந்த கொடூரமான தாக்குதலால் இருவருக்கும் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது.  

காவல்நிலையத்தின்  கழிப்பறை, சுவர்கள் லத்தி, மேஜைகள் என பல்வேறு இடங்களில் தந்தை-மகன் இருவரது ரத்தங்கள் படிந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனை மத்திய தடயவியல் துறையின் பரிசோதனைக்கு (CFSl) அனுப்பிய போது இந்த ரத்தக் கறைகள் இறந்துபோன தந்தை, மகன் டிஎன்ஏ உடன் பொருந்தியுள்ளது.

இந்த ரத்த மாதிரி ஜெயராஜ் மனைவி செல்வராணியின் DNA உடனும் பொருந்துகிறது. மேலும் காவல் நிலையத்தில் ரத்த கரைகளின் தடயங்களை குற்றம்சாட்டப்பட்ட காவல்துறையினர் அழிக்க முயன்றுள்ளனர். இரவு முழுவதும் தாக்கப்பட்டதில் இருவரும் பலத்த காயம் அடைந்ததால், அதிகமான ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.  சிந்திய ரத்தங்களை  காயம்பட்ட தந்தை மகன் இருவர் மூலமே துடைக்க சொல்லியும் துன்புறுத்தி உள்ளனர்.

வீட்டிலிருந்து மாற்று உடைகள் கொண்டுவர சொல்லி இரண்டு முறை உடைகள் மாற்றப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் மருத்துவர் வெண்ணிலா இவர்களை பரிசோதனை செய்தபோது அலட்சியமாக செயல்பட்டு இவர்களுடைய ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயை சான்றிதழில் குறிப்பிடாமல் அலட்சியமாக செயல்பட்டது மட்டுமின்றி சிறைக்கு அடைக்க இவர்கள் தகுதியானவர் என தகுதி சான்றும் கொடுத்துள்ளார்.

இருவரையும் சிறையில் அடைக்கும் போது சிறை காவலர்கள் மற்றும் சிறை மருத்துவர் ஆகியோருடைய ஆவணங்களிலும் இவர்கள் உடலில் பல இடங்களில் ரத்த காயங்கள் இருந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. சிபிஐ அதிகாரிகளின் விசாரணை மற்றும் ஆவணங்கள் மூலமாக குற்றம்சாட்டப்பட்ட காவலர்கள் குற்றம் செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளன" என குறிப்பிடப்பட்டுள்ளது.