ரவுடி ஜான் pt desk
குற்றம்

சேலம்: நீதிமன்ற விசாரணைக்கு வந்த பிரபல ரவுடியை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

சேலத்தில் வழக்கு ஒன்றில் விசாரணைக்கு ஆஜராக வந்த பிரபல ரவுடியை நீதிமன்ற வளாகத்திலேயே காவல்துறையினர் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

webteam

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலம் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஜான். இவர் மீது பிரபல ரவுடிகள் நெப்போலியன் மற்றும் சின்னதுரை கொலை வழக்குகள், அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு வழக்கு ஒன்றில் தலைமறைவான ஜானை கிச்சிபாளையம் காவல் நிலைய போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் 60 நாட்கள் கையெழுத்திட வேண்டும் என்கிற நிபந்தனையுடன் நீதிமன்றம் ஜானுக்கு ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து 4 நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து அவர் வெளியே வந்துள்ளார்.

Court

இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நெப்போலியன் கொலை வழக்கில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இன்று ஜான் ஆஜராக நினைத்துள்ளார். ஆஜரான பிறகு, மனைவி சரண்யாவுடன் காரில் வீடு திரும்ப நினைத்த அவரை, நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து கன்னங்குறிச்சி காவல் நிலைய போலீசார் குண்டுக் கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜான் தினசரி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போடாததால் கைது செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் வழக்கில் கைது செய்யப்பட்டாரா? என்ற விவரங்கள் வெளிவரவில்லை.

தமிழகத்தில் அடுத்தடுத்து பிரபல ரவுடிகள் என்கவுன்ட்டர் செய்யப்பட்டு வருவதால் தன்னுடைய கணவரை என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டு போலீசார் தூக்கிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ள அவரது மனைவி சரரண்யா, ஜானின் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் காவல்துறையே முழு பொறுப்பு என தெரிவித்துள்ளார்.