குற்றம்

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு கிழிந்த, சாயம் போன சட்டையை தந்த நிறுவனம்: நூதன மோசடி

ஆன்லைனில் ஆர்டர் செய்தவருக்கு கிழிந்த, சாயம் போன சட்டையை தந்த நிறுவனம்: நூதன மோசடி

நிவேதா ஜெகராஜா

சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த இளைஞரொருவர் ஆன்லைனில் சட்டைகளை ஆர்டர் செய்திருக்கிறோம். அதில் அவருக்கு கிழிந்த சட்டைகளை சம்பந்தப்பட்ட நிறுவனம் அனுப்பி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

விக்னேஷ் என்ற கட்டடப் பொறியாளர் யூடியூப்பில் வந்த விளம்பரத்தைப் பார்த்து 799 ரூபாய்க்கு 3 சட்டைகளை ஆர்டர் செய்துள்ளார். ஒரு வாரம் கழித்து சட்டைகள் அடங்கிய பார்சல் வந்த நிலையில், அதனைப் பிரித்துப் பார்த்த அந்த இளைஞருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம், அதில் கிழிந்து சாயம் போன பழைய சட்டை இருந்துள்ளது. இதனால் விக்னேஷ் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்.

பார்சலை டெலிவரி செய்த கூரியர் நிறுவனத்தை தொடர்புகொண்டு பேசியபோது, பிரிக்கப்பட்டுவிட்டதால் அதனை திருப்பி எடுக்க முடியாது என்று உறுதிபடக் கூறிவிட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருந்திய அந்த இளைஞர், சட்டைகளை திருப்பி அனுப்பலாம் என முடிவெடுத்து, அதற்கான வழிமுறைகள் உள்ளதா எனத் தேடியபோது அதுவும் இல்லை.

இதன்பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம் என தொலைபேசி எண்ணை தேடியபோது அது வலைதளப்பக்கத்தில் இல்லாததால், அடுத்த என்ன செய்வது எனத்தெரியாமல் விழிபிதுங்கி தவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அவர்களது நண்பர்களை தொடர்பு கொண்டபோது இது போன்ற பல மோசடிகள் நடைபெறுவதாகவும் தாங்களும் இதுபோன்று சில பொருட்களை வாங்கி ஏமாந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். இவர் சட்டை வாங்கிய தளமான Peterstrew.com சென்று அதனுடைய சைட் பேஜில் பார்த்தபோது, வடநாட்டில் இருந்து பலரும் இப்படியான குற்றசாட்டினை கமெண்ட்ஸ் செக்ஷனில் தெரிவித்திருந்தது தெரியவந்துள்ளது.

ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் இதுபோன்று பல மோசடிகள் இந்தியா முழுவதும் நடைபெற்று வருவதாகவும், ஒரு நாளைக்கு இந்த மாதிரியான மோசடியால் கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுபோன்ற விஷயங்களில் அரசு மற்றும் சைபர் கிரைம் காவல்துறையினர் தலையிட்டு நூதன மோசடி கும்பலை கைது செய்ய வேண்டும் என பயனாளிகள் பலரும் கோரிக்கை வைக்கின்றனர்.
இதுபோன்ற பரிச்சயமில்லாத ஆன்லைன் வலைதள பக்கங்களில் பொருட்கள் வாங்கும்போது, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியதும் அவசியம். ஒரு வலைதளத்தில் பொருள்வாங்கும் முன்பு, அதன் கமெண்ட் செக்‌ஷனை பார்க்க வேண்டியது முக்கியம். 
இந்த விவகாரத்தில் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் பிரபல சமூக வலைதளமான யூடியூப் ஃபேஸ்பக் போன்ற ஆப்களில், இதுபோன்ற மோசடிக் கும்பல்கள் விளம்பரங்களை தொடர்ந்து வருகின்றன. அடிக்கடி பயன்படுத்தும் பரிட்சயமான ஆப்களில் இப்படியான விளம்பரங்கள் வருவதை நம்பி, மக்கள் பலரும் வாங்குவிடுகின்றனர். இந்த இடத்தில், மக்கள் நம்பிக்கைக்குரிய சமூக வலைதளங்களில் விளம்பரங்களை ஆராய்ந்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கிறது. அதற்கு, விளம்பரதாரர் தரத்தை நிறுவனங்கள் ஆராய்தல் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
மனோஜ்கண்ணா