Accused pt desk
குற்றம்

சேலம் | பழைய 500, 1000 நோட்டுகளை மாற்றித் தருவதாக மோசடி – ரூ.1 கோடி மதிப்பிலான நோட்டுகள் பறிமுதல்

webteam

செய்தியாளர்: மோகன்ராஜ்

சேலத்தைச் சேர்ந்த சபீர், பாலாஜி, கோகுலநாதன் உள்ளிட்டோர் கூட்டாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பின் போது இவர்கள் வசம் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்துள்ளன. இதனை மாற்றிக் கொடுப்பதாக சபீர் தனது பங்குதாரர்களிடம் (பாலாஜி, கோகுலநாதனிடம்) கூறி செல்லாத நோட்டுகளை அவர்வசம் வாங்கியதாக தெரிகிறது.

Old money

ஆனால், ஆண்டுகள் பல கடந்தும் ரூபாய் நோட்டுகளை சபீர் மாற்றிக் கொடுக்கவில்லை. இதனிடையே பணத்தை கொடுத்த இருவரில் பாலாஜி என்பவர் உயிரிழந்த நிலையில், கோகுலநாதன், சபீரிடம் பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது பணம் தன்னிடம் அப்படியே இருப்பதாகவும் இதனை மாற்றுவதற்காக முயற்சி செய்த வகையில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளதாகவும் அந்த பணத்தை கொடுத்துவிட்டு ரூபாய் நோட்டுக்களை எடுத்துச் செல்லுமாறும் சபீர் கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த கோகுலநாதன், சபீர் அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் சபீரின் வீட்டிலிருந்து ஒரு கோடி ரூபாய் செல்லாத 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து ரூபாய் நோட்டுக்களை பதுக்கி வைத்திருந்த சபீரைரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.