சேலம் காடையாம்பட்டி அருகே பள்ளி மாணவர்கள் இடையே நடந்த சண்டையை கண்டிக்க சென்ற தாய், மாணவனை இரும்புக் கம்பியால் தாக்கியதில் பலத்த காயத்துடன் உயர்சிகிச்சை பிரிவில் மாணவன் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள தீவட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி என்பவரின் மகன் திருப்பதி. அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவரின் மகன் சந்தோஷ். இவர்கள் இருவரும் தீவட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் நண்பர்களாக பள்ளியில் ஒன்றாக விளையாடுவது வழக்கமாக இருந்துள்ளது. அப்போது நேற்று விளையாடி கொண்டிருந்தபோது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதுகுறித்து சந்தோஷ் தனது தாய் மணிமேகலையிடம், திருப்பதி தன்னை தாக்கியதாக தெரிவித்துள்ளார். இதனால், கோபமடைந்த மணிமேகலை உடனடியாக திருப்பதி வீட்டுக்கு சென்று கேட்டுள்ளார். அப்போது மணிமேகலை மற்றும் மாணவன் திருப்பதி ஆகியோரிடையே வாய்த் தகராறு முற்றியுள்ளது. இதில், ஆத்திரமடைந்த மணிமேகலை, அருகில் கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து திருப்பதியின் தலையில் சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், தலையில் பலத்த காயமடைந்த திருப்பதி, ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்துள்ளார். இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் மாணவனை மீட்டு ஒமலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.
மேலும், இரும்புக் கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவனுக்கு சிறுமூளை பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே மாணவன் திருப்பதியின் தந்தை மணி கொடுத்த புகாரின் பேரில் தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். தொடர்ந்து மாணவனை இரும்புக் கம்பியால் தாக்கிய மணிமேகலையை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஒமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர்.