குற்றம்

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: நாமக்கலில் கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

புதிய தலைமுறை செய்தி எதிரொலி: நாமக்கலில் கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது

kaleelrahman

கலப்பட டீசல் விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்த கடத்தல் தடுப்பு காவல் துறையினர், விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட லாரியை குடிமைப்பொருள் பறிமுதல் செய்தனர்.

நாமக்கல் அருகே தொட்டிபட்டி கிராமத்தில் உள்ள ராமசாமி என்பவரின் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக கலப்பட டீசல் விற்பனை செய்வது தொடர்பான பிரத்யேக செய்தி புதிய தலைமுறையில் ஒளிபரப்பானது. இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் அவர்கள் உறுதியளித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் கோட்டை குமார் மற்றும் நாமக்கல் துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அங்கு கலப்பட டீசலுடன் நின்ற லாரியை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்ப முயன்ற தமிழ்ராஜை மடக்கி பிடித்தார்.

மேலும் அங்குள்ள விவசாய நிலத்தில் உள்ள கோழிபண்ணையில் டேங்கர் வைத்து கலப்பட டீசலை விற்பனை செய்த மணி மற்றும் ஆனந்த்ராஜ் உள்ளிட்டோரிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் தாங்கள் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து கலப்பட டீசலை வாங்கி வந்து இங்கு லிட்டம் 76 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், தொடர்ந்து பல மாதங்களாக விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

சந்தையில் இன்று டீசல் லிட்டர் 93 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் லிட்டருக்கு 16 ரூபாய் குறைவாக இருப்பதால் லாரி உரிமையாளர்கள் தங்களது டீசலை பயன்படுத்துவதாகவும் தெரிவித்தனர். மேலும் இந்த டீசல் எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, இதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விசாரணை செய்த வருவாய் கோட்டாசியர் மேல்நடவடிக்கை எடுக்க குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு காவல் துறையினரிடம் 3 பேரையும் ஒப்படைத்தார்.

இதனையடுத்து மணி, ஆனந்தராஜ், தமிழ்ராஜ் ஆகிய 3 பேரையும் கைதுசெய்த போலீசார் டீசல் டேங்கர் லாரியையும் பறிமுதல் செய்து இதில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.