சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப்படை காவல்துறையினர் கஞ்சா சோதனையில் ஈடுபட்டிருந்தபோது ரூ. 53 லட்சம் ரூபாய் கட்டுக்கட்டாக சிக்கியது. நடந்தது என்ன?
ரயில் மூலமாக சென்னைக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுக்க ரயில்வே பாதுகாப்புப்படை காவல்துறையினர் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தீவிர கண்காணிப்பு சோதனைகளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக பிற மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் பயணிகளின் உடமைகளை சோதனை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் திடீரென சோதனைகளை நடத்தி வருவதால் கஞ்சா போன்ற போதைபொருட்கள் அதிகளவில் சிக்கி வருகிறது. இன்று சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் ஆய்வாளர் ரோகித் தலைமையிலான தனிப்படை போலீசார், ஆந்திராவில் இருந்துவரும் பினாகினி எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வரப்படுகிறதா? என திடீரென சோதனை நடத்தினர்.
அதில் பயணிகளின் உடமைகளையும் சோதனையிட்டனர். அப்போது பயணி ஒருவரின் பையை சோதனை செய்தபோது ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் கட்டுக்கட்டாக ரு.53 லட்சம் பணம் இருந்தது. உடனே ரயில்வே போலீசார் அதனை கைப்பற்றி பயணியை பிடித்து சென்ட்ரல் ரயில்வே பாதுகாப்புப்படை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
பார்சல் பார்சலாக வைக்கப்பட்டிருந்த ரூ. 53 லட்சம் ரூபாயைக் கொண்டுவந்த பயணியிடம் விசாரணை நடத்தியதில், அவர் ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த யுகந்தர் என்பது தெரியவந்தது. இவர் சென்னை சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இங்கு நகை பட்டறையில் செய்யப்படும் நகைகளை ஆந்திராவில் உள்ள நகைக்கடைகளில் விற்றுவிட்டு பணத்தை கொண்டுவந்ததாக பிடிபட்ட யுகந்தர் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிடிபட்ட நகைக்கடை ஊழியர் யுகந்தரிடம் ரூ. 53 லட்சம் வைத்திருந்தது தொடர்பாக முறையான ஆவணங்கள் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை கூறியதால் ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அங்குவந்த வருமானவரித்துறை அதிகாரிகள் யுகந்தரிடம் விசாரணை நடத்தினர். அப்போதும் முறையான பதில் கிடைக்கவில்லை. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை போலீசார் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ரூ. 53 லட்சத்தை ஒப்படைத்தனர். யுகந்தரின் வாக்குமூலத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பதிவுசெய்து அழைத்துச் சென்றனர். யுகந்தரை ஆந்திராவிற்கு அனுப்பிவைத்த நகைக்கடை உரிமையாளரை நேரில் வரவழைத்து விசாரணை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.