குற்றம்

களிமண்ணிற்குள் ரூ.43 லட்ச தங்கம்! மதுரை விமான நிலையத்தில் துபாய் பயணியிடமிருந்து பறிமுதல்

களிமண்ணிற்குள் ரூ.43 லட்ச தங்கம்! மதுரை விமான நிலையத்தில் துபாய் பயணியிடமிருந்து பறிமுதல்

நிவேதா ஜெகராஜா

மதுரை விமான நிலையத்தில் துபாய் பெண் பயணி ஒருவர் தனது உடலில் பச்சை நிற களிமண்ணிற்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த 43 லட்ச ரூபாய் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பின் மதுரையில் இருந்து துபாய், இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரைக்கு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கடத்தல் தங்கம் கொண்டு வரப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனைத்தொடர்ந்து சுங்கப்புலனாய்வு துறை அதிகாரிகள், துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை தனித்தனியாக சோதனை செய்தனர். மேலும் அவர்கள் கொண்டுவந்த உடமைகளையும் பல்வேறு கட்டங்களாக பரிசோதனை செய்தனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த பெண் பயணி ஒருவரின் சந்தேக நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் அவர் கொண்டு வந்த உடைமைகளையும் பரிசோதித்தனர். அப்போது அவர் உடலில் பழுப்பு மஞ்சள் நிற ரப்பர் போன்ற பொருளால் பச்சை நிற களிமண்ணிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 24 காரட் தூய்மையான சுமார் 813 கிராம் தங்கத்தை கண்டுபிடித்தனர்.

மேலும் அவர் துபாயில் இருந்து அதனை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு 43லட்சத்து 24ஆயிரத்து 524ரூபாய் மதிப்பு என தங்கத்தை பறிமுதல் செய்து தகவல் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து அவரை கைது செய்து விசாரணைக்காக காவல்துறையில் ஒப்படைத்த நிலையில், இச்சம்பவம் தொடர்பாக மதுரை விமான நிலைய சுங்க நுண்ணறிவு பிரிவினர் பெண் பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தங்கம் கடத்தி வந்த பெண்ணிடம் யாராவது கமிஷன் கொடுப்பதாக கூறி தங்கத்தை கொடுத்தனுப்பினரா அல்லது அவரே கடத்தி வந்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.