குற்றம்

ஆன்லைனில் கொரோனா மருந்து எனக்கூறி ரூ.42,000 மோசடி

Sinekadhara

கள்ளச்சந்தையில் கொரோனா மருந்து வாங்க முயற்சித்து 42 ஆயிரம் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபர். 

கொரோனா தொற்று தீவிரமான நிலையில் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகிறார்கள். நோய் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கு செலுத்தப்படும் மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் சிலர் அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்றுவருகிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த தமிழினி என்பவர், தனது மனைவியை கொரோனாவுக்கு பறிகொடுத்தநிலையில், உறவினர் ஒருவருக்காக மருத்துவர் பரிந்துரைத்த டோசிலிசுமாப் என்ற மருந்தை தேடியுள்ளார்.

ஆன்லைனில் மருந்து இருப்பதாக தெரிவித்த நிறுவனத்திடம் தனது செல்போன் எண்ணை பதிவு செய்துள்ளார். அப்போது அவரை தொடர்பு கொண்ட நபர், 42 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினால் 2 மணிநேரத்தில் மருந்தை டெலிவரி செய்வதாக கூறியிருக்கிறார். நம்பி பணம் செலுத்திய தமிழினி 2 மணிநேரத்துக்கும் மேலாக காத்திருந்தபோதும் மருந்து கிடைக்கவில்லை. அதன்பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். 

உயிர் பயத்தில் இருக்கும் மக்களின் தேவையை பயன்படுத்தி இதுபோன்று ஆன்லைனில் மோசடி செய்பவர்களால் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.