குற்றம்

ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டை பறிமுதல்

ரூ.40 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் கடல் அட்டை பறிமுதல்

webteam

தூத்துக்குடியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் கடல் அட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடியை அடுத்த டேவிஸ்புரம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மீன் பதப்படுத்தும் குடோன் உள்ளது. இந்த குடோனில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் வைக்கப்பட்டிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டேவிஸ்புரம் பகுதியில் மைதீன், மீராஷா ஆகியோருக்கு சொந்தமான குடோனில் தனிப் படையினர் சோதனை செய்தனர். இதில் சுமார் ஒரு டன் கடல் அட்டைகள் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக தாளமுத்துநகர் காவல் ஆய்வாளர் தங்க கிருஷ்ணனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடோனில் இருந்த நபர்களிடம் விசாரணை நடத்தினர்.

போலீசாரின் விசாரணையில் குடோனில் பதப்படுத்துதல் பணியில் ஈடுபட்டிருந்த இருவரும் வட மாநிலத்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்கள் சைலேந்திரகுமார், பிரேம்குமார் என்பதும், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. 10 நாட்களுக்கு முன்னர்தான், மீன் பதப்படுத்துதல் தொழிலுக்காக ஆட்கள் தேவை என அழைத்து வந்து கடல் அட்டைகளை பதப்படுத்தி இலங்கைக்கு கடத்தும் பணியில் அவர்களை ஈடுபடுத்தியது விசாரணையில் வெளிவந்தது. குடோனில் 15-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் ட்ரம்களில் பதப்படுத்துவதற்காக கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.

அதனருகே இருந்த மற்றொரு இடத்தில் பதப்படுத்தப்பட்டு உலர வைக்கப்பட்ட கடல் அட்டைகளும் இருந்தது. இவை மொத்தம் ஒரு டன் எடையும், 40 லட்சம் ரூபாய் மதிப்பும் உள்ளது என போலீசார் தெரிவித்தனர். இந்த கடல் அட்டைகளை தூத்துக்குடியிலிருந்து கடல்வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீசார், அவற்றை மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பதப்படுத்துதல் பணியில் ஈடுபட்ட சைலேந்திர குமார், பிரேம் குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தனியார் குடோனின் உரிமையாளர்களான மைதீன், மீராஷா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.