ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக கவர்ச்சிகர விளம்பரம் வெளியான நிலையில் தமிழகம் முழுவதும் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் தொடர்புடைய இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தியதில் அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடந்த மே 6-ஆம் தேதி ஆரணி சேவூர் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்றில் ஆருத்ரா கோல்டு நிதி நிறுவனம் கிளை ஒன்று திடீரென உருவாகியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 ஆயிரம் ரூபாயாக தரப்படும் என்று விளம்பரம் வெளியானது. இதன்படி முதலீடு செய்தால், 3 முதல் 10 ஆண்டுகள் வரை முதலீட்டுத்தொகை திருப்பி தரப்படமாட்டாது என்றும், மாதாமாதம் ஒரு லட்சத்துக்கு 30 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை நம்பி முதல்நாளே 100க்கும் மேற்பட்டோர் முதலீடு செய்ததாகவும், 1 கோடியே 25 லட்சம் ரூபாய் வரை வசூலானதாகவும் தெரிகிறது. விளம்பரத்தால் எழுந்த ஐயத்தின் காரணமாக சேவூர் கிளை அலுவலகத்திலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் 20 இடங்களில் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், முதலீட்டு விண்ணப்பத்தில் குறிப்பிட்டிருந்த ஒரு எண்ணை நாம் தொடர்பு கொண்டு பேசியபோது, முதலீடு செய்த நபர் ஒருவர் இதுகுறித்து விவரித்தார். ஆனால், தங்கள் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி மோசடி நடந்துள்ளதாக ஆருத்ரா கோல்ட் நிதி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கி அங்கீகரிக்காத எந்த நிதி நிறுவனத்திலும் பணத்தை முதலீடு செய்யக்கூடாது என்றும் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு போலி நிதி நிறுவனங்களில் முதலீடு செய்தால் மக்கள் நிச்சயம் ஏமாற்றப்படுவார்கள் என பொருளாதாரக் குற்றப்பிரிவு தென்மண்டல காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் நடத்தப்பட்ட சோதனையில், டெபாசிட் விவரங்கள் தொடர்பான லெட்ஜர்கள், பதிவேடுகள், 48 கணினிகளின் ஹார்டு டிஸ்க், 6 மடிக்கணினிகள், 44 மொபைல் போன்கள், 60 சவரன் தங்கம், 2 கார்கள் மற்றும் ரூ.3.41 கோடி பெரும் ரொக்கம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரொக்கமாக வசூலான பணம் டெபாசிட் செய்யப்பட்ட 11 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மனுதாரர்கள் மேலும் தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க புலனாய்வு அதிகாரி @eowtn7of2022@gmail.com ஐ தொடர்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புதுப்பிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நிதி நிறுவனங்களில் மட்டுமே குடிமக்கள் தங்கள் பணத்தை சேமிக்க / டெபாசிட் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.