குற்றம்

குடும்பப் பிரச்னையை மறைத்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனைவிக்கு ரூ.25,000 அபராதம்

குடும்பப் பிரச்னையை மறைத்து ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த மனைவிக்கு ரூ.25,000 அபராதம்

Sinekadhara

குடும்பப் பிரச்னையை மறைத்து, கணவரை கண்டுபிடித்துத் தருமாறு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த பெண்ணுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த ஹம்சத் தோனி என்ற மருத்துவர், உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல்செய்த மனுவில், காணாமல் போன தனது கணவர் கார்த்திக்கை அவரது குடும்பத்தினர் அடைத்து வைத்திருக்கலாம் என சந்தேகம் இருப்பதாகக் கூறியிருந்தார். ஆகவே, கார்த்திக்கை கண்டுபிடித்து ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்தப் பெண் கேட்டுக்கொண்டிருந்தார். இம்மனு விசாரணைக்கு வந்தபோது, அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரரின் கணவர் கார்த்திக் சென்னையில் அவரது நண்பருடன் வசித்து வருவதாகக் கூறி அவரை காணொளி வாயிலாக நீதிபதிகள் முன் ஆஜர்படுத்தினார். அப்போது அவர், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தனது மனைவியும் அவரது தந்தையும் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதால், சென்னையில் நண்பருடன் தங்கியிருப்பதாகவும் கூறினார்.

இதனையடுத்து மனுதாரர், குடும்பப் பிரச்னையை மறைத்து, மனு தாக்கல் செய்திருப்பதாக நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். எனவே, நீதிமன்ற நடைமுறைகளை தவறாக பயன்படுத்தியதற்காக மனுதாரருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும், அந்தத் தொகையை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை சட்டப்பணிகள் ஆணைக்குழுவிடம் செலுத்துமாறு உத்தரவிட்டு, மனுவை தள்ளுபடி செய்தனர்.