குற்றம்

புனே: வயதான தம்பதியிடம் போலீசார்போல் நடித்து ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

புனே: வயதான தம்பதியிடம் போலீசார்போல் நடித்து ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை

Sinekadhara

புனேவில் போலீசார்போல் நடித்து வயதான தம்பதியரிடமிருந்து ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள நகைகளை திருடிச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

புனேவின் சஸ் சாலையில் சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் நடந்து சென்றுகொண்டிருந்த வயதான தம்பதியினரிடம் இருசக்கர வாகனத்தில் வந்த போலீசார் இருவர், நகைகளை பத்திரமாக வைக்கும்படி கூறியிருக்கின்றனர். குறிப்பாக அந்த வயதான பெண்மணி அணிந்திருந்த நகைகளை கழற்றி கைப்பைக்குள் வைக்குமாறு கூறியிருக்கின்றனர். போலீசார் கூறுவதைக் கேட்டு அந்தப் பெண்மணியும் தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பைக்குள் வைத்திருக்கிறார். அந்த போலீசார் இருவரும் இவர்களிடம் பேச்சுக்கொடுத்த படியே சிறிது தூரம் வந்திருக்கின்றனர். பின்னர் வீட்டிற்கு சென்று பார்த்தபோது கைப்பையில் நகைகள் இல்லாததைக் கண்ட தம்பதியர் அதிர்ச்சியடைந்துடன், போலீசார்போல் நடித்து திருடர்கள் தங்களிடமிருந்து நகைகளை பறித்துச்சென்றதையும் உணர்ந்திருக்கின்றனர்.

இதுகுறித்து 72 வயதான அந்த முதியவர் ரூ.2.6 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். மேலும் இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும், உறவினரைப் பார்க்க புனேவிற்கு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார். கொள்ளையர்கள்மீது இந்திய சட்டப்பிரிவுகள் 420 மற்றும் 170இன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.