அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு பெயரில் போலியான நேர்முகத் தேர்வுகள் நடத்தி அரசு வேலைகள் வாங்கித்தருவதாக ரூ.2.5 கோடி மோசடி செய்த வழக்கில்; முக்கிய குற்றவாளி உட்பட 4 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய அரசின் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் (AICTE) பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்தி மதுரை, கோயமுத்தூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் போன்ற இடங்களில் ஆட்களை வேலைக்குத் தேர்வு செய்வதாக சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் தென் மண்டல அலுவலர் சுந்தரேசன் காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் அளித்த புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு, வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவில் வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், புகாரில் உள்ள விபரங்கள் உண்மையென தெரியவந்த நிலையில் வேலை வாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு 26.12.2021-ந் தேதி திருப்பத்தூர் மாவட்டத்தில் போலியாக நேர்முகத் தேர்வுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படையினர் திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ரோடு, பாரண்டபள்ளி கூட்ரோடு அருகிலுள்ள வைஷ்ணவி நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் போலியாக நேர்முக தேர்வு நடத்தி கொண்டிருந்த 8 நபர்களை கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை தனிப்படையினர் தேடி வந்த நிலையில், கர்நாடகா மாநிலம், மங்களூர் பகுதிகளில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படையினர் அங்கு சென்று முக்கிய நபரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திபாகரன் என்ற மணிகண்டன் என்பவரையும் அவருக்கு உடந்தையாக இருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த சத்தியநாராயணன், திருச்சியைச் சேர்ந்த மணிகண்டன், ஓசூரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் ஆகியோரை கைது செய்தனர்.
விசாரணைக்கு பிறகு கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மேலும் மோசடி செயலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் மற்றும் போலி ஆவணங்கள், அடையாள அட்டைகள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
விசாரணையில் திபாகரன் தன்னை ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்றும், அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தலைமை என்றும், தனக்கு மத்திய மற்றும் மாநில அரசின் பல முக்கிய அரசியல் பிரமுகர்களை தெரியும் என்று பொதுமக்களிடம் கூறி மத்திய மற்றும் மாநில அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி சுமார் ரூ.2.5 கோடிக்கு மேல் ஏமாற்றியதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் திபாகரன் மீது 2015-ம் ஆண்டு முதல் சென்னை மத்திய குற்றப்பிரிவிலும், தூத்துக்குடி மாவட்டத்திலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்று ஏமாற்றிய வழக்குகள் நிலுவையில் உள்ளது என விசாரணையில் தெரியவந்தது.
பொதுமக்கள் யாரும் இதுபோன்று போலியாக ஏமாற்றும் நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், வேலைக்காக முயற்சி செய்பவர்களிடம் அரசாங்கமோ அல்லது தனியார் நிறுவனங்களோ எவ்வித முறையிலும் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை வழங்கும் திட்டம் கிடையாது எனவும், வேலைக்காக முயற்சி செய்பவர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம், வங்கியின் மூலமாகவோ, ரொக்கமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ பண பரிமாற்றம் செய்ய வேண்டாம் என்றும், வேலைக்காக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு விண்ணப்பிக்ககூடிய வேலைக்கான சந்தேகங்களை நிவர்த்தி செய்யுமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தி உள்ளார்.