மாட்டு ராஜா கைது pt desk
குற்றம்

ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளி மாட்டு ராஜா கைது - ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்பா?

webteam

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 27 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் முக்கிய ரவுடிகளான சம்பவம் செந்தில், சீசிங் ராஜா மற்றும் புதூர் அப்புவை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரவுடி புதூர் அப்புவின் கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜாவை தனிப்படை போலீசார் பெங்களூருவில் வைத்து கைது செய்துள்ளனர். பட்டினம்பாக்கத்தில் மாமுல் வசூலில் ஈடுபட்டு மிரட்டிய வழக்கில் ரவுடி மாட்டு ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

Armstrong murder case

ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளியான ரவுடி மாட்டு ராஜா மீது 2011-ஆம் ஆண்டு நடந்த பில்லா சுரேஷ் மற்றும் விஜி ஆகியோர் இரட்டை கொலை வழக்கு, கோடம்பாக்கம் சிவா கொலை வழக்கு என மொத்தம் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மறைந்த ரவுடி மயிலை சிவக்குமாரின் அசோசியேட்டாக மாட்டு ராஜா மற்றும் புதூர் அப்பு செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.

ரவுடி புதூர் அப்புவின் நெருங்கிய கூட்டாளி என்பதால் மாட்டு ராஜாவிடம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

மேலும், புதூர் அப்புவின் இருப்பிடம் குறித்தும் மாட்டு ராஜாவிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மாட்டு ராஜாவின் நெருங்கிய நண்பர் புதூர் அப்பு என்பதால் அப்புவின் பெயரை கையில் மாட்டு ராஜா பச்சைக் குத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ரவுடி புதூர் அப்பு கைது செய்யப்பட்ட பின்பே மாட்டு ராஜாவிற்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்புள்ளதா என்று தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரவுடி மாட்டு ராஜாவை பட்டினம்பாக்கம் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.