குற்றம்

பல்லாவரத்தில் பழி தீர்க்கும் நோக்கில் ரவுடிகள் கோஷ்டி மோதல்: அச்சத்தில் தவித்த மக்கள்..!

பல்லாவரத்தில் பழி தீர்க்கும் நோக்கில் ரவுடிகள் கோஷ்டி மோதல்: அச்சத்தில் தவித்த மக்கள்..!

Rasus

சென்னையில் முன் விரோதம் காரணமாக இரு தரப்பு ரவுடிகளுக்கிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதில் இருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ஒருவர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பியோடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த கண்டோன்மெண்ட் பாரத் நகரில் வசித்து வருபவர் விக்கி (எ) விக்னேஷ்(23). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தன்ராஜ்(27) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஏற்பட்ட தகராறில் இருவரும் தாக்கிக் கொண்டனர்.  இதில் விக்னேஷ் சிறைக்கு சென்றார். அப்போது தன்ராஜ் நண்பர்கள் ‘சிறியவனிடம் போய் அடி வாங்கி விட்டாயே நீயெல்லாம் ஒரு ரவுடியா’ என கிண்டல் செய்துள்ளனர். இதனால் மிகுந்த மன உளைச்சலும் அவமானமும் அடைந்த தன்ராஜ் வெறியுடன் காத்திருந்தார். அதற்கேற்றார் போல் சிறைக்கு சென்ற விக்னேஷ் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இதனை தெரிந்து கொண்ட தன்ராஜ் தனது நண்பர்களான திலீப் மற்றும் சிலருடன் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களோடு விக்னேஷின் வீட்டிற்கே சென்று கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கொலை செய்யும் நோக்கத்தோடு சென்ற ரவுடி தன்ராஜ், விக்னேஷை கொலை செய்ய அரிவாளை வீசும் போது அவரது தந்தை மகேஷ் சிக்கிக் கொண்டார். அவர் மீது முதுகு, தலை, கழுத்து கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர் தன்ராஜ். ரத்த வெள்ளத்தில் சரிந்த மகேஷை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

தனது தந்தையை வெட்டி விட்டு சென்ற தன்ராஜை போட்டுத் தள்ள வேண்டும் என்ற வெறியுடன் விக்னேஷ் அவரது தம்பி சரவணன், மற்றும் தணிகா ஆகியோர் ஆயுதங்களுடன் சென்று தன்ராஜ் மற்றும் அவரது நண்பர்களுடன் கூட்டாக மோதிக் கொண்டனர். இதில் தன்ராஜ் நண்பரை விக்னேஷ் தரப்பினர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

இருவரின் கோஷ்டி மோதலால் இரண்டு இரு சக்கர வாகனம், ஒருவர் வீட்டின் ஜன்னல் கண்ணாடி ஆகியவை சேதமாக்கப்பட்டன. இரு தரப்பு ரவுடிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலால் நேற்றிரவு அப்பகுதி மக்கள் கதவுகளை அடைத்து கொண்டு ஒருவித அச்சத்தில் இருந்தனர். அதன் பின்னர் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது வரை அங்கு எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாதவாறு இருக்க போலீசார் போடப்பட்டுள்ளனர். 

கோஷ்டி மோதலில் ஈடுபட்ட ஒரு தரப்பின் முக்கிய குற்றவாளி தன்ராஜை பல்லாவரம் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் தப்பியோடிய நபர்களையும் தேடி வருகின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.