செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
கர்நாடக மாநிலம் கதக், டவுன் லக்குந்தி பகுதியைச் சேர்ந்தவர் சஞ்சய் கோப்பா (38). இவர் மீது, கதக், பாகல்கோட்டை, ஹூப்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 12 கொள்ளை வழக்குகளும், ஒரு கொலை முயற்சி வழக்கும் பதிவாகி தேடப்படும் குற்றவாளியாக உள்ளார்.
இந்நிலையில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி கணகினஹால சாலையில் நின்று கொண்டிருந்த நபரிடம் தகராறு செய்து அவரிடம் போலீஸ் எனக் கூறி அவர் அணிந்திருந்த ரூ5.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் பறித்துச் சென்றார்.
இந்த வழக்கை விசாரித்த கதக் கிராமப்புற போலீசார், சஞ்சையை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதையடுத்து போலீசார், அவரை சம்பவம் நடந்த பகுதிக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, தலைமை காவலர் பிரகாஷ் என்பவரை கல்லால் தாக்கிவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். அப்போது காவல் ஆய்வாளர் சங்கமேஷ், சஞ்சயை துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், அவரது வலது காலில் குண்டு பாய்ந்து கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து அவரை மீண்டும் கைது செய்த போலீசார், சிகிச்சைகாக ஜீம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தலையில் காயமடைந்த தலைமை காவலர் பிரகாஷ், மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.