குற்றம்

கொள்ளையனை தப்பிக்க வைத்த உறவினர்கள்.. பிடிக்காமல் போகமாட்டோம் என முகாமிட்ட போலீசார்!

கொள்ளையனை தப்பிக்க வைத்த உறவினர்கள்.. பிடிக்காமல் போகமாட்டோம் என முகாமிட்ட போலீசார்!

webteam

குடியாத்தம் பகுதியில் செல்போன் மற்றும் நகை கொள்ளையில் ஈடுபட்டவரை கைது செய்யும் போது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து போலீஸ் பிடியிலிருந்து தப்பிக்க வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நெல்லை மாநகர காவல்துறையினர் கொள்ளையனை பிடிக்காமல் நாங்கள் போக மாட்டோம் என கிராமத்திற்குள் முகாமிட்டுள்ளனர்.

வேலூர் மாவட்டம் ராஜக்கல் ஊராட்சி சங்கராபுரம் பகுதியில், நெல்லை மாநகர காவல் துறை ஆய்வாளர் ஹரிகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படை காவல்துறையினர், செல்போன் மற்றும் நகை கொள்ளையில் ஈடுபட்டுவந்த கொள்ளையனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அப்போது கொள்ளையனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொள்ளையன் மஞ்சன் (எ) கமலேஷ் என்பவரை காவல்துறை பிடியிலிருந்து தப்பிக்க உதவியதால், அவர் தப்பித்து சென்றிருக்கிறார்.

இந்நிலையில் கொள்ளையனை தப்பிக்க வைத்த சம்பவத்தால், சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. விவரம் அறிந்த மேல்பட்டி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு புறப்பட்டு வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகும் அவரை ஒப்படைக்க உறவினர்கள் மறுத்ததால் நெல்லை மாநகர காவல் துறையினர் கிராமத்திலேயே முகாமிட்டு காத்திருக்கின்றனர்.

இது குறித்து நெல்லை மாநகர காவல் ஆய்வாளர் ஹரிகரன் கூறுகையில், மாலைக்குள் கொள்ளையனை ஒப்படைப்பதாக கிராம மக்கள் சேர்ந்து உறுதியளித்துள்ளனர். அவனை கைது செய்து அழைத்து செல்லும் வரை கிராமத்தை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறினார்.