கூடலூர் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 700 கிலோ ரேசன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக காரில் கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்தபடுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தமிழக-கேரளா எல்லையில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாடுகாணி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக நின்ற கேரளா பதிவெண் கொண்ட காரை சோதனை செய்ய சென்றுள்ளனர்.
போலீசார் வருவதை கண்ட கார் ஓட்டுனர், காரை வேகமாக ஒட்டி தேவாலா பகுதிக்கு சென்று, காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றுள்ளார். காரை விரட்டி சென்ற போலீசார், சோதனை செய்த போது காரில் சுமார் 30க்கும் மேற்பட்ட மூட்டைகளில், தனியார் அரசி ஆலைகளின் பெயரில் உள்ள பைகளில் ரேஷன் அரிசி கடத்துவது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த போலீசார், தப்பி சென்ற கார் ஓட்டுனரை தேடி வருகின்றனர்.