குற்றம்

ரேசன் அரிசி கடத்தல்: ஒரே மாதத்தில் 30 பேர் கைது - 9.75 டன் அரிசி பறிமுதல்

ரேசன் அரிசி கடத்தல்: ஒரே மாதத்தில் 30 பேர் கைது - 9.75 டன் அரிசி பறிமுதல்

kaleelrahman

சென்னையில் ரேசன் அரிசியை கடத்தியதாக 1 மாதத்தில் 30 பேர் கைது செய்யப்பட்டு 9,750 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரிசா மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், எழும்பூர் ரயில் நிலைய 5வது நடைமேடையில் 1000 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்து, கடத்த முயன்ற நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரை ரேசன் அரிசியை கடத்தியதாக 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 30 பேரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் இவர்களிடமிருந்து 9,750 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்துள்ளனர். குறிப்பாக ரேசன் அரிசியை கடத்திய குற்றத்திற்காக புளியந்தோப்பை சேர்ந்த பாலா என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது குறிப்பிடத்தக்கது.