நடனசபாபதி pt
குற்றம்

“யார்கிட்டயாச்சும் சொன்னேன்னு வச்சிக்கோ” ரேபிடோ பைக்கில் சென்ற பெண்ணிடம் ஓட்டுனர் அத்துமீறல்..

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் ரேபிடோ பைக் புக் செய்து பயணித்தபோது, பைக் ஓட்டுனர் அவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

யுவபுருஷ்

செய்தியாளர் - ஆனந்தன்

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 19ம் தேதி இரவு, தனது செல்போனில் ரேபிடோ செயலி மூலம் பைக் டாக்சி புக் செய்துள்ளார். அதன்படி, ரேபிடோ இருசக்கர வாகனம் மூலம் கிண்டியில் இருந்து கொட்டிவாக்கம் பகுதிக்கு சென்றுள்ளார். இதற்கிடையே, ரேபிடோ பைக் ஓட்டுநர் நடனசபாபதி, அந்த பெண்ணை இறக்கிவிட்ட பிறகு திடீரென அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கிருந்து அந்த பெண் தப்பிச்செல்ல முயல்கையில், அவரைப் பின்தொடர்ந்து சென்ற நடனசபாபதி, இதுகுறித்து வெளியில் யாரிடமும் சொல்ல கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், பதறிப்போன அந்த பெண், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரைத் தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

மேலும் நீலாங்கரை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குன்றத்தூர் பகுதியை சேர்ந்த நடனசபாபதி என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நடந்த விசாரணையில், நடனசபாபதி கடந்த 6 மாத காலமாக ரேபிடோ செல்போன் செயலி மூலம் பைக் டாக்சி இருசக்கர வாகனம் ஓட்டி தொழில் செய்து வருவது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட நடனசபாபதி, விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.