8 பேர் கைது  pt desk
குற்றம்

ராணிப்பேட்டை: ரூ.1 கோடி பணம் கேட்டு நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மகள் கடத்தல் - 8 பேர் கைது

ராணிப்பேட்டையில் தனியார் நிதி நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகளை கடத்தி ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய வழக்கில் பெண் உட்பட எட்டு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

PT WEB

செய்தியாளர்: ச.குமரவேல்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் அல்தாப் தாசிப் (36) இவர் செய்யாறு பகுதியில் தனியார் நிதி நிறுவனம் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டு, நகை சேமிப்பு திட்டங்களை நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்தது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வெளியில் உள்ளார்.

கார்கள் பறிமுதல்

இந்நிலையில் இவரிடம் மேலாளராக பணியாற்றி வந்த வாலாஜாவைச் சேர்ந்த வசந்தகுமார், அல்தாபின் மனைவி சப்ரீன் பேகம் (32) மகள் அல்வினா மரியம் (3) ஆகிய இருவரையும் காரில் வெளியூர் அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதையடுத்து நேற்று (18.11.2024) சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது இருவரையும் கடத்தி வைத்து, சப்ரின் பேகத்தின் தாயார் ஹயாத்தின் பேகத்திற்கு போன் செய்து ஒருகோடி பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து ஹயாத்தின் பேகம் ராணிப்பேட்டை காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து காவல்துறையினரின் வழிகாட்டுதலின் படி பணத்தை கொடுப்பதாக ஒப்புக்கொண்ட ஹயாத்தின், வசந்தகுமாரை மாந்தாங்கல் அருகே வரச் சொல்லி உள்ளார் இதை நம்பி அங்கு வந்த வசந்தகுமாரை பதுங்கி இருந்த காவல் துறையினர் விரட்டிப் பிடித்து கைது செய்தனர். இவருடன் பார்த்திபன் (35), ஏசுதாஸ் (30), சரத்குமார் (31) ருத்ரேஷ்வரர் (30), கோமதி (35), வினோத் (35), கார்த்திக் (34) ஆகிய எட்டு பேரை கைது செய்தனர்.

arrested

இதையடுத்து அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட இருவரை மீட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் இவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.