ராஜஸ்தானில் தாயத்து செய்வதற்காக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள புலியின் மீசையை மூத்த வனத்துறை அதிகாரிகள் வெட்டியதாக வனத்துறை காவலர் ஒருவர் அம்மாநில முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தின் சர்ஸ்கா என்ற புலிகள் அதிகம் வாழும் பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ST-6 ரக புலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த புலியின் மீசையை தாயத்து செய்வதற்காக மூத்த வனத்துறை அதிகாரிகள் வெட்டியதாக வனத்துறை காவலர் ஒருவர் ராஜஸ்தான் முதலமைச்சர் அஷோக் கெஹ்லோட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பெயர் குறிப்பிடாத அந்த காவலர், ஜனவரி மாதத்திலிருந்தே புலி சிகிச்சையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த தகவலை ஒரு வனத்துறை அதிகாரி போதையில் இருந்தபோது தன்னிடம் கூறியதாகவும், போதைத் தெளிந்தபிறகு, இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என தன்னை அவர் மிரட்டியதாகவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தக் கடிதத்தை வனத்துறை அமைச்சர், டெல்லி தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் வனத்துறை தலைமை அதிகாரி ஆரன்யா பவனுக்கும் அனுப்பியுள்ளார்.