ராஜஸ்தான் கொள்ளையர்கள் PT
குற்றம்

விமானம் மூலம் வந்து கொள்ளையடித்து தப்பி செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்கள்! தீரன் பட பாணியில் கைது!

விமானம் மூலம் சென்னை வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டு ரயிலில் தப்பிச் செல்லும் ராஜஸ்தான் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டு சென்னை கொண்டுவரப்பட்டனர்.

webteam

கடந்த 14-ம் தேதி மாதவரம் பகுதியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணிடம் மர்ம நபர்கள் 8 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மாதவரம் காவல் நிலையத்தில் கவிதா புகார் அளித்தநிலையில், வழக்குப் பதிவு செய்த மாதவரம் துணை ஆணையர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், செயின் பறிப்பு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்று கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் குற்றவாளிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள் என்ற தகவல் தெரிந்தது. கிடைத்த தகவலை வைத்துக்கொண்டு புழல் காவல் ஆய்வாளர் சண்முகம், உதவி ஆய்வாளர் மணி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு ரயில் மூலமாக ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் பகுதியில் உள்ள பாலி என்கிற இடத்திற்கு சென்றனர்.

ராஜஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள்!

ராஜஸ்தான் சென்ற காவலர் குழு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மகேந்திர குமார் என்ற குற்றவாளியை முதலில் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட மற்ற நபர்கள் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரமேஷ்பஞ்ஜாரா மற்றும் தினேஷ்குஜார் என்பது தெரியவந்தது. அவர்களை தேடிக்கண்டுபிடித்த காவலர் குழு 2 கொள்ளையர்களையும் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

ராஜஸ்தான் கொள்ளையர்கள்

கைது செய்யப்பட்ட இரு கொள்ளையர்களையும் ராஜஸ்தானில் இருந்து ரயில் மூலம் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்த காவலர் குழு, மாதவரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

விமானம் மூலம் சென்னை வந்து ரயில் மூலம் தப்பிச்சென்றது அம்பலம்!

செயின் பறிப்பில் ஈடுபட்ட மூன்று கொள்ளையர்களும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து விமான மூலம் அடிக்கடி சென்னை வந்து செயின் பறிப்பு சம்பவங்களை அரங்கேற்றிவிட்டு தப்பி சென்றது தனிப்படை போலீசாரில் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவம் மட்டும் தானா இல்லை வேறு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து தனிப்படை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மீது ராஜஸ்தான் காவல் நிலையத்தில் ARMS ACT நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.