குற்றம்

ராஜபாளையம்: திருமணத்தை மீறிய உறவு: பெண் அடித்துக் கொலை – ஒருவர் கைது

ராஜபாளையம்: திருமணத்தை மீறிய உறவு: பெண் அடித்துக் கொலை – ஒருவர் கைது

webteam

ராஜபாளையத்தில் திருமணத்தை மீறிய உறவால் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள அயன் கொல்லங் கொண்டானை சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இதில், இரண்டு பேரில் ஒருவர் காவல் துறையில் பணியாற்றி வரும் நிலையில், மற்றொருவர் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், முத்துச்சாமியின் மனைவி குடும்ப பிரச்னை காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து இதே பகுதியைச் சேர்ந்த பாப்பையன் என்பவரது மனைவி காளீஸ்வரிக்கும் முத்துசாமிக்கும், திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.இரவில் முத்துச்சாமிக்கு சொந்தமான செங்கல் சூளையில், இருவரும் தங்குவது வழக்கம் என கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்றிரவு முத்துச்சாமிக்கும், காளீஸ்வரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. தகராறு முற்றிய நிலையில், சூளையில் கிடந்த கம்பு மற்றும் கட்டைகளைக் கொண்டு முத்துச்சாமி, காளீஸ்வரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த காளீஸ்வரி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து முத்துச்சாமி அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

இதைத் தொடர்ந்து காலையில் செங்கல் சூளைக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பார்த்தபோது, காளீஸ்வரி சடலமாக கிடந்துள்ளார். அவர்களது தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற சேத்தூர் ஊரக காவல் துறையினர், சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி ப்ரீத்தி, கொலை குறித்து அக்கம் பக்கத்தினர் மற்றும் தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து தப்பியோடிய முத்துச்சாமியை தேடிப் பிடித்துள்ள காவல் துறையினர், அவரிடம் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.