குற்றம்

சென்னையில் வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு - அந்த 7 இடங்கள் எவை?

சென்னையில் வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு - அந்த 7 இடங்கள் எவை?

Veeramani

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தொடர்பாக சென்னையில் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை. எங்கெல்லாம் என்பதனை பார்க்கலாம்...

சென்னை மயிலாப்பூர் நரசிம்மபுரம் பகுதியில் உள்ள கான்ஸ்டரோமல் கூட்ஸ் (constromal goods) பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா சாலையில் ஆலம் கோல்டன் டைமண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் சோதனையானது நடைபெற்று வருகிறது. மேலும், தியாகராயநகரில் உள்ள திருமலைப்பிள்ளை சாலையில் சிப்ரியான் ஒட்டலிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சிப்ரியான் என்ற சொகுசு ஹோட்டலை வாங்குவதற்கு 3 கோடியே 87 லட்சத்து 88 ஆயிரத்து 797 ரூபாய் எஸ் பி வேலுமணியின் கூட்டாளி சந்திரபிரகாஷின் சகோதரியான ராஜேஸ்வரி வங்கிக் கணக்கிலிருந்து எஸ்.பி.வேலுமணியின் உறவினர் சண்முகராஜா மற்றும் லோகநாதன் ஆகியோர் வங்கி கணக்கு சென்றது தெரியவந்துள்ளது. ராஜேஸ்வரி கணவர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் உறவினர் லோகநாதன் என்பதும் குறிப்பிடத்தக்கது.



கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்ட மகா கணபதி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி வசித்து வரும் நந்தனம் சிஐடி நகர் பகுதியில் உள்ள வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. முக்கியமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான் சம்பாதித்த சட்டவிரோத பணத்தை நகைக்கடை மூலமாக வருமானத்திற்கு கணக்கு காட்ட பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. சுமார் 292 கோடி ரூபாய் தங்கம் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக போலி ஆவணங்கள் மூலம் கணக்கு காட்டப்பட்டது மூலம் கணக்கில் காட்டாத வருமானத்தை சொத்துக்களாக மாற்றியது முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த மகா கணபதி ஜூவல்லர்ஸ் 54 கோடி ரூபாய்க்கு தங்கம் உள்ளிட்ட பொருட்கள் வாங்கியதாக போலி கணக்குகள் காட்டி இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதன் முக்கிய பங்குதாரர்கள் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் சகோதரர் அன்பரசன் மற்றும் அவரது மனைவி ஹேமலதா ஆவர்.  மகா கணபதி ஜுவல்லர்ஸ் தொடர்பான முக்கியமான நிர்வாகி வீட்டில் தான் சிஐடி நகரில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.



மேலும் சென்னை கோடம்பாக்கம் தெற்கு சிவன் கோயில் தெருவில் உள்ள வானம் கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தில் விஷ்ணுவர்த்தன் என்பவரது இடத்திலும் சோதனை நடத்தி வருகின்றனர். விஷ்ணுவர்த்தன் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின்  நெருங்கிய கூட்டாளியான சந்திரபிரகாஷின் உறவினர் ஆவார். இவர் சின்ஸ்ட்ரானிக் இந்தியா (cinstronic India) நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனத்தை இருபத்தி ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து அதை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடர்பான கேசிபி நிறுவனத்திற்கு பணம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக வைத்து விஷ்ணுவர்தன் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னை ஆதம்பாக்கம் ஈபி காலனி பகுதியில் வசித்து வரும் ஊரக வளர்ச்சித் துறை சூப்பிரண்டெண்டிங் இன்ஜினியர் சரவணக்குமார் இல்லத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது. சரவணக்குமார் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி உதவியாளர் போல் செயல்பட்டு வரும் சந்திரசேகரனின் உறவினர் ஆவார். சரவணகுமார் வர்தன் இன்ப்ராஸ்ட்ரக்சர் (vardhan infrastructure) என்ற நிறுவனத்தின் பங்குதாரராக உள்ளார்.



மேலும் ஆலம் கோல்டன் பைமெண்ட் நிறுவனத்திலும் பங்குதாரராக உள்ளார். முக்கியமாக வர்தன் இன்ப்ராஸ்ட்ரக்சர் நிறுவனத்தை முப்பத்தி ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை செய்து கேசிபி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சரவணக்குமார் தொடர்பான இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மெய்காவலராக இருந்த தலைமைக்காவலர் ஸ்டாலின் என்பவரது வீடு மயிலாப்பூர் பாபநாசம் சிவன் சாலையில் அமைந்துள்ளது. அமைச்சராக இருந்தபோது மெய்க்காவலர் ஆக இருந்ததால், எஸ் பி வேலுமணியின் முறைகேடுகள் தொடர்பாக இவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். டெண்டர் முறைகேடு மற்றும் சொத்துக்களை குறித்த விவகாரத்தில் மெய்க்காவலர் ஆக இருந்த ஸ்டாலினுக்கு தெரிந்த தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறாக சென்னையில் 7 இடத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.